இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட், நாளை கோல்கட்டாவில் துவங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியை போல, இங்கும் இந்திய அணியின் சுழல் ஆதிக்கம் தொடருமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. டில்லியில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்த போட்டியில் பிரக்யான் ஓஜா, ஹர்பஜனுக்குப் பதில் வாய்ப்பு பெற்ற அஷ்வின் இருவரும் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர். இதில், 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமான வீரர்களில் இரண்டாவது சிறந்த பவுலிங்கை பதிவு செய்தார்.
புதிய ஜோடி:
இந்தியாவின் கும்ளே - ஹர்பஜன் சிங் ஜோடி, அணியின் "மேட்ச் வின்னர்களாக' இருந்துள்ளனர். கும்ளே 2008ல் ஓய்வு பெற்றார். ஹர்பஜன் சமீபகாலமாக "பார்ம்' இன்றி தவித்து வருகிறார். இப்படி ஒரு இக்கட்டான நிலையில், பிரக்யான் ஓஜாவும் (7 விக்.,), அஷ்வினும் இணைந்து "மேட்ச் வின்னர்களாக' சரியான நேரத்தில் ஜொலித்துள்ளனர்.
பிரசன்னா பாராட்டு:
இதனிடையே அஷ்வினுக்கு இன்று திருமணம் நடக்கிறது. இவரை பாராட்டிய இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் பிரசன்னா கூறுகையில், ""டில்லி டெஸ்டில் அஷ்வின் பவுலிங் என்னை கவர்ந்து விட்டது.
பந்தை எவ்வித குறையும் இல்லாமல், சரியான அளவு மற்றும் வேகத்தில் வீசுகிறார். தனது உயரத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு, பந்தை நன்கு சுழற்றுகிறார்,'' என்றார்.
இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை கோல்கட்டாவில் துவங்குகிறது. வழக்கமாகவே சுழலுக்கு நன்கு ஒத்துழைக்கும் இங்குள்ள ஆடுகளம், இம்முறையும் ஏமாற்றாது என்றே தெரிகிறது.
இதனால், டில்லி டெஸ்டில் ஏற்கனவே சுழற் பந்து வீச்சை சந்திக்க திணறிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர், கோல்கட்டாவில் மீண்டு வருவது சிரமம்.
பேட்டிங் நம்பிக்கை:
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை, முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் சொதப்பினாலும், இரண்டாவது இன்னிங்சில் எழுச்சி பெற்றது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்காத நிலையிலும், சச்சின், சேவக், லட்சுமண், டிராவிட் போன்ற சீனியர் வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். காம்பிர் இரு இன்னிங்சிலும் நல்ல துவக்கம் அமைத்து தந்தார்.
சந்தர்பால் அபாரம்:
வெஸ்ட் இண்டீஸ் அணியில் சந்தர்பால் மட்டும் (118, 47 ரன்கள்) சிறப்பான முறையில் ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் இந்தியாவின் சுழலில் சிக்கி விரைவில் திரும்பினர். இதை அந்த அணியின் கேப்டன் சமியும் ஒத்துக்கொண்டார்.
பவுலிங்கில் சமி, பிடல் எட்வர்ஸ், தேவேந்திர பிஷு ஆகியோர், முதல் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டனர். இருப்பினும், இந்திய அணியின் வலிமையான பேட்டிங் வரிசை மீது, தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால் தான், எழுச்சி பெற முடியும்.
0 comments:
Post a Comment