100வது சதத்தை மீண்டும் நழுவவிட்டார் சச்சின்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 38 ரன்களுக்கு அவுட்டான இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் "சதத்தில் சதம் அடிக்கும் வாய்ப்பை மீண்டும் ஒருமுறை நழுவவிட்டார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. டில்லியில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி கண்ட இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது டெஸ்ட், கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று துவங்கியது. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.


காம்பிர் அரைசதம்:

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சேவக், காம்பிர் ஜோடி நல்ல துவக்கம் அளித்தது. முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்த போது சேவக் (38) அவுட்டானார். அடுத்து வந்த அனுபவ வீரர் டிராவிட்டுடன் இணைந்த காம்பிர், டெஸ்ட் அரங்கில் தனது 17வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர், 103 பந்தில் 65 ரன்கள் (8 பவுண்டரி) எடுத்து அவுட்டானார்.


டிராவிட் அபாரம்:

பின், "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுடன் இணைந்த டிராவிட், டெஸ்ட் அரங்கில் தனது 62வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100வது சதத்தை எதிர்நோக்கி விளையாடிய சச்சின் (38) மீண்டும் ஒருமுறை ஏமாற்றினார்.

இதன்மூலம் சச்சினின் "சதத்தில் சதம் அடிக்கும் கனவு நீடிக்கிறது. இவர், கடந்த மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) தொடரின் லீக் போட்டியில் தனது 99வது சர்வதேச சதத்தை (48 ஒருநாள்+51 டெஸ்ட்) அடித்தார்.

அதன்பின் இவர் விளையாடிய நான்கு ஒருநாள் (2, 53, 85, 18 ரன்கள்), ஆறு டெஸ்ட் (34, 12, 16, 56, 1, 40, 23, 91, 7, 76, 38 ரன்கள்) போட்டியில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தவிக்கிறார்.

0 comments:

Post a Comment