விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் ஒருநாள் போட்டி இன்று ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிபந்தா, சிக்கந்தர் ரஷா சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தனர்.
34 ரன்கள் எடுத்த சிபந்தா, மிஸ்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வில்லியம்ஸ் 15 ரன்கள் எடுத்த நிலையில் ரெய்னா பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார்.
அதன்பின் மஜகட்சா 11 ரன்களுக்கும், கேப்டன் டெய்லர் 12 ரன்களுக்கும், வாலர் 2 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய சிக்கந்தர் ரஷா அரை சதத்தை கடந்தார். அதன்பின் இவருடன் ஜோடி சேர்ந்த சிகும்பரா அதிரடி காட்டினார்.
அவர் இந்திய வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். சிறப்பாக விளையாடிய சிக்கந்தர் ரஷா 82 ரன்கள் எடுத்த நிலையில் மிஸ்ரா பந்தில் போல்டானார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய முடோம்போட்சி 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
உத்சையா 8 ரன்களுடனும், சிகும்பரா 42 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிகும்பராவின் அதிரடியில் 6 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். இந்திய அணி தரப்பில் மிஸ்ரா 3 விக்கெட்டுகளும், வினய்குமார், முகம்மது ஷமி, உனாத்கட், ரெய்னா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் அதிக நேரம் நிலைக்கவில்லை. தவான் 17 ரன்களிலும், ரோகித் சர்மா 20 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். இதையடுத்து கேப்டன் கோலியுடன், ராயுடு இணைய ஆட்டம் சூடுபிடித்தது. இருவரும் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
பந்துகளை பவுண்டரிகளாக விரட்டிய கோலி, சதம் விளாசினார். மறுமுனையில் ராயுடு அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஆடிய கோலி 115 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அப்போது அணியின் ஸ்கோர் 216. கோலியைத் தொடர்ந்து வந்த ரெய்னா, ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதன்பின்னர் ராயுடுவும், தினேஷ் கார்த்திக்கும் இணைந்து அடுத்த சில நிமிடங்களில் வெற்றியை எட்டினர். ராயுடு 63 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
31 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது போட்டி 26-ம் தேதி இதே மைதானத்தில் நடக்கிறது.
0 comments:
Post a Comment