நாளை இந்தியா ஜிம்பாப்வே முதல் மோதல்



ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, ஜிம்பாப்வே சென்றடைந்தது. இரு அணிகள் மோதும் முதல் போட்டி நாளை ஹராரேயில் நடக்கிறது.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி, வெஸ்ட் இண்டீசில் முத்தரப்பு ஒருநாள் கோப்பை வென்றது இந்திய அணி. 

அடுத்து ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதில் பங்கேற்க இளம் இந்திய அணி நேற்று ஜிம்பாப்வே சென்றது.

இந்த அணியில் கேப்டன் தோனி, அஷ்வின், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் உள்ளிட்ட பல வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. விராத் கோஹ்லி கேப்டனாக உள்ளார். 

இரு அணிகள் மோதும் முதல் போட்டி, நாளை ஹராரேயில் நடக்கவுள்ளது. இங்குள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவர் எனத் தெரிகிறது. 

கடந்த 2010ல் முத்தரப்பு தொடரில் இங்கு விளையாடிய ரெய்னா தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வேயிடம் தொடர்ந்து 2 போட்டிகளில் தோற்று, பைனலுக்கு கூட முன்னேறவில்லை. 

இம்முறையும் பல முன்னணி வீரர்கள் இல்லாமல் உள்ளது பலவீனமாகப் படுகிறது. இருப்பினும், காஷ்மீரில் இருந்து முதன் முதலாக இந்திய அணியில் இடம் பெற்ற பர்வேஸ் ரசூல் உள்ளிட்ட வீரர்கள், தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறுகையில்,""ஒருநாள், "டுவென்டி-20' போட்டிகளில் அனுபவம் ஒரு பொருட்டே அல்ல. அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள் திறமையை வெளிப்படுத்துவர் என நம்புகிறேன்,'' என்றார். 

0 comments:

Post a Comment