200வது டெஸ்டில் 100 அடிப்பாரா சச்சின்



தென் ஆப்ரிக்க தொடரில் 200வது டெஸ்டில் பங்கேற்கவுள்ள சச்சின், சதம் (100) அடித்து அசத்த வேண்டும்,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி விருப்பம் தெரிவித்தார்.

இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 40. இதுவரை, 198 டெஸ்ட் (51 சதம்), 463 ஒருநாள் போட்டிகளில் (49 சதம்) பங்கேற்று, சதத்தில் "சதம்' அடித்து சாதித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த இவர், டெஸ்ட் போட்டிகளில் தொடர்கிறார். 

டிச.26ல் துவங்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, சச்சின் தென் ஆப்ரிக்கா செல்வார். இங்கு 200வது டெஸ்டில் விளையாடுவார். 
இது குறித்து கங்குலி கூறியது:

கிரிக்கெட் அரங்கில் மகத்தான சாதனை படைத்த வீரர் சச்சின். அதிகமான பெருமை இருக்கும் போதே ஒய்வு பெறுவது நல்லது. அதை விட்டு விட்டு களத்தில் ரன்கள் எடுக்க முடியாமல் திக்கித் திணறி, போராடிவிட்டு பிறகு வெளியேறுவது நன்றாக இருக்காது.

சச்சினைப் பொறுத்தவரை தென் ஆப்ரிக்க மண்ணில் 200வது டெஸ்டில் பங்கேற்கவுள்ளார். இப்போட்டியில் சதம் அடித்து அசத்த வேண்டும் என விரும்புகிறேன்.

 இதேபோல, வெஸ்ட் இண்டீசின் சாதனை வீரர் பிரையன் லாராவுடன் இணைந்து விளையாடியுள்ளேன். நன்றாக விளையாடும் போதே ஓய்வு பெற்று விடுங்கள் என்று, அவரிடமே தெரிவித்தேன். 

நல்ல முன்னேற்றம்: இந்திய அணியில் நிறைய முன்னேற்றங்கள் தெரிகின்றன. ஆனால், வெளிப்படையாக சொல்வதென்றால் டெஸ்ட் போட்டிகள் வித்தியாசமானவை. இதை தவறாக சொல்லவில்லை. 

தென் ஆப்ரிக்காவின் புற்கள் நிறைந்த, வேகத்துக்கு சாதகமான ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு கடுமையானவை என்று தான் சொல்கிறேன். தோனி மீண்டும் வெற்றி தேடித்தருவார் என்று நம்புகிறேன். 

எனது நேரம் முடிந்து விட்டது. இப்போது தோனியின் நேரம். நான்கு ஆண்டுகளாக நன்கு செயல்பட்டு வருகிறார். அடுத்து வேறு யாராவது வருவர்.
இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

0 comments:

Post a Comment