புள்ளி விவரங்கள் சச்சினுக்கு சாதகம் - பாண்டிங் புலம்பல்



அணியின் வெற்றிக்கு சச்சினை விட, லாராதான் அதிகம் கைகொடுத்தார் என்ற பாண்டிங்கின் கருத்து தவறானது. இதனை, புள்ளி விவரங்கள் தெளிவாக நிரூபிக்கின்றன. 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஆஸ்திரேலியாவின் ஓய்வு பெற்ற பாண்டிங் இடையே, எப்போதும் போட்டி இருந்து கொண்டே இருக்கும். 

டெஸ்டில் சச்சினின் அதிக சத (51) சாதனையை துரத்தியவர். ஒரு கட்டத்தில் சச்சின் தொடர்ந்து விளாச, பாண்டிங்கினால் இவரை எட்ட முடியவில்லை. பாண்டிங் ஓய்வு பெற்றுவிட, சச்சின் சதத்தில் "சதம்' கடந்து, இன்னும் கிரிக்கெட்டில் நீடிக்கிறார். 

இப்போது திடீரென, அணியின் வெற்றிக்கு கைகொடுப்பதில் சச்சினை விட லாரா சிறந்தவர் என்கிறார். புள்ளிவிவரங்கள் இதை மறுக்கின்றன. 

சச்சின் அடித்த 51 டெஸ்ட் சதத்தில், 20 வெற்றி (39.01 சதவீதம்), 11 தோல்வி கிடைத்தது. ஆனால், லாரா அடித்த 34 சதத்தில் 8ல் தான் (23.52) வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 14 ல் அவரது அணி தோல்வியடைந்தது. 

வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில், சச்சின் 5வது இடத்தில் வருகிறார். அதேநேரம், தோல்வியடைந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தததில் முதலிடம் லாராவுக்குத் தான்.

அதாவது, வெஸ்ட் இண்டீஸ் தோல்வியடைந்த 63 டெஸ்டில், லாரா 5316 ரன்கள் ( 14 சதம்) எடுத்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் மூன்றாவது இடத்தில் (56 டெஸ்ட், 4088 ரன்கள்) தான் வருகிறார்.

டெஸ்ட் போட்டிகளில் இரு இன்னிங்சிலும் சேர்த்து, குறைந்தது 200 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்தும், அணி தோற்றதில் லாரா தான், சச்சினை விட முதலிடத்தில் உள்ளார். அதாவது 8 முறை லாரா 200, 207, 213, 218, 221, 232, 243, 351 என ரன்கள் எடுத்த போதும், அவரது அணி தோற்றது. 

அதேநேரம், சச்சின் இரு இன்னிங்சிலும் சேர்த்து 208 ரன்கள் எடுத்த, ஒரு போட்டியில் (1998, ஆஸி., பெங்களூரு) தான் இந்தியா தோற்றது. ஆனால், அணியின் வெற்றிக்கு கைகொடுப்பதில் லாரா தான் முன்னணியில் உள்ளதாக பாண்டிங் கூறுகிறார். 

லாரா பங்கேற்ற டெஸ்டில் வெற்றி சதவீதம் 24.42. இதில் லாராவின் பங்கு 24.50 சதவீதம். ஆனால் சச்சினின் வெற்றி சதவீதம் 35.35. இதில், இவரது பங்கு மட்டும் 37.01 சதவீதமாக உள்ளது.

இதேபோல, ஒருநாள் போட்டிகளிலும் சச்சின் (62 ஆட்ட நாயகன்) தான், லாராவை (30) விட முன்னணியில் உள்ளார். புள்ளி விவரங்கள் இப்படி இருக்க, பாண்டிங் எதை வைத்து சச்சினை விட, லாரா "டாப்' என்றாரோ, இது அவருக்கே வெளிச்சம்.

1 comments: