தோனி Vs சேவக் நிறுத்துவார்களா சண்டையை?

கேப்டன் தோனி, சேவக் இடையிலான மோதல் முற்றுகிறது. சுழற்சி முறை "பார்முலா' தொடர்பாக இருவரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதால், இந்திய அணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையில் பி.சி.சி.ஐ., தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டுமென கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் சொதப்புகிறது.

இந்தச் சூழலில், "டாப்-ஆர்டரில்' சச்சின், சேவக், காம்பிர் ஆகியோர் "பீல்டிங்கில்' மந்தமாக செயல்படுவதால், சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவர் என்று தோனி அதிரடியாக அறிவித்தார். இதற்கேற்ப யாராவது ஒருவருக்கு வாய்ப்பு மறுத்தார்.

தவிர, முத்தரப்பு தொடரின் அனைத்து போட்டிகளிலும் ரோகித் சர்மா இடம் பெறுவார் என குறிப்பிட்டார். இதனை கேட்டு காம்பிர் ஆத்திரமடைந்தார். தோனிக்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட்டார். சேவக்கும் போர்க்கொடி உயர்த்தினார்.


தோனிக்கு எதிர்ப்பு:

இவர்களுக்கு, இலங்கைக்கு எதிரான கடந்த போட்டி சரியான சந்தர்ப்பமாக அமைந்தது. இதில், தடை காரணமாக தோனி பங்கேற்கவில்லை. கேப்டன் பொறுப்பை சேவக் ஏற்றார். தோனி சொன்னதற்கு நேர்மாறாக "டாப்-ஆர்டரில்' சச்சின், சேவக், காம்பிர் ஆகிய மூவரும் இடம் பெற்றனர். அடுத்து தோனிக்கு மிகவும் பிடித்த ரோகித் சர்மாவை தடாலடியாக நீக்கினர்.

இது குறித்து சேவக் கூறிய கருத்துக்கள் அணிக்குள் நிலவும் சண்டையை உறுதி செய்தது. இவர் கூறுகையில்,""ஆஸ்திரேலியாவில் அடுத்த உலக கோப்பை தொடர் நடப்பதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தான் தோனி சொன்னார். எங்களது "பீல்டிங்' பற்றி என்ன சொன்னார் என்று தெரியவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக ஒரே மாதிரி தான் "பீல்டிங்' செய்கிறோம். இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜெயவர்தனா அடித்த பந்தை பறந்து சென்று நான் "கேட்ச்' பிடித்ததை பார்த்தீர்கள் அல்லவா? இப்பிரச்னை பற்றி தோனியிடம் நான் பேச வேண்டிய அவசியமில்லை. அவர் தான் அணியின் தலைவர்.

அவரும் பயிற்சியாளரும் சேர்ந்து "டாப்-ஆர்டர்' வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க விரும்பினால், எனக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. என்னை பொறுத்தவரை அனைத்து போட்டிகளிலும் விளையாட தயாராக இருக்கிறேன்,''என்றார்.


அணியில் பிளவு:

முன்னணி வீரர்களான தோனி, சேவக் இடையே ஏற்பட்டுள்ள மோதல், அணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் "மீடியா'வில் வெளிப்படையாக பேசுவது, கோஷ்டி மோதலை வளர்த்தது. இது அணியின் ஆட்டத்திறனை பாதித்ததால், தோல்வி தொடர்கதையாகிறது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு, பி.சி.சி.ஐ., உடனடியாக தலையிட வேண்டும் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து கபில் தேவ் கூறியது:

தற்போதைய பிரச்னை ஆஸ்திரேலிய மண்ணில் அரங்கேறியுள்ளது. அங்கே என்ன நடக்கிறது என்று நமக்கு தெளிவாக தெரியாது. அணியில் பிளவு என்று கூற மாட்டேன். வீரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவு தான். கேப்டன் என்ற முறையில் தோனியின் கருத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அணி மற்றும் தேசத்தின் நலன் கருதி, இப்பிரச்னையில் பி.சி.சி.ஐ., தலையிட்டு வீரர்களுடன் பேசி, சுமூக தீர்வு காண வேண்டும்.

பெற்றோர்களுக்கு இடையே கூட கருத்து வேறுபாடு உள்ளது. எனவே, பிரச்னையை பெரிதாக்க தேவையில்லை. நாட்டின் பெருமையை காக்க வேண்டும் என்பதை வீரர்கள் உணர வேண்டும். ஏதாவது தவறாக புரிந்து கொண்டிருந்தால், அதனை சரி செய்ய வேண்டும்.

உலக சாம்பியன் என்பதற்கேற்ப சிறப்பாக விளையாடும்படி இந்திய வீரர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். களத்தில் கடினமாக போராடி வெற்றியை வசப்படுத்துவது அவசியம். ஆஸ்திரேலிய தொடர் முடித்து தாயகம் திரும்பிய பின், அணியின் தவறுகள் பற்றி பி.சி.சி.ஐ., மற்றும் தேர்வாளர்கள் விவாதிக்கலாம்.

இந்திய அணியின் எதிர்காலம் பற்றி உறுதியான முடிவு எடுக்க வேண்டும். "சீனியர்' வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தால் நல்லது. ஒருவேளை நீக்கப்பட்டால், அதற்கான காரணத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


சச்சின் ஓய்வு:

சச்சினை பொறுத்தவரை உலக கோப்பை வென்ற கையுடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து தான். அவர் தான் ஓய்வு பற்றி முடிவு எடுக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் பாண்டிங்கை நீக்குகிறார்கள். அதே பாணியை இங்கே பின்பற்ற முடியாது. இரு நாடுகளிலும் வெவ்வேறு வகையான அணுகுமுறை உள்ளது.

இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

0 comments:

Post a Comment