யுவராஜ் சிங்கிற்கு நுரையீரல் கட்டியால் ஆபத்து

யுவராஜ் சிங்கின் நுரையீரலில் ஆபத்தான "கேன்சர்' கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ். சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரில், நமது அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில், இவரது இடது நுரையீரலில் "கோல்ப்' பந்து அளவுக்கு சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. "இது வெறும் கட்டி தான்; கேன்சர் நோய் அல்ல' என, இவரது தாயார் ஷப்னம் சிங் கூறினார்.


அதிர்ச்சி செய்தி:

இந்தச் சூழலில், யுவராஜுக்கு ஏற்பட்டுள்ளது கேன்சர் கட்டி தான் என்ற அதிர்ச்சி தகவலை, அவரது பிசியோதெரபிஸ்டும் டாக்டருமான ஜதின் சவுத்ரி நேற்று தெரிவித்தார்.

பொதுவாக 0 நிலையில் கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டால், அதனை ஆரம்பம் என்பர். 1 முதல் 4ம் நிலை வரை இருந்தால், கேன்சர் கிருமி வேகமாக பரவிக் கொண்டிருப்பதாக அர்த்தம். யுவராஜின் கட்டி, நிலை 1ல் உள்ளதாம். இதற்காக அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் கேன்சர் ஆய்வு மையத்தில் "கீமோதெரப்பி' சிகிச்சை மேற்கொணடு வருகிறார்.


இது குறித்து சவுத்ரி கூறியது:

யுவராஜ் நுரையீரலில் இருப்பது கேன்சர் கட்டி தான். இது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியது அல்ல. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டதால், குணப்படுத்திவிடலாம். கட்டியின் சில பகுதிகள் இருதயத்தின் ரத்தநாளங்களுக்கு மேல் உள்ளது. இதனால் கட்டி உடைந்து விடும் அபாயம் உள்ளது. ஆனாலும், 100 சதவீதம் குணப்படுத்தக் கூடியது தான்.


"ஆப்பரேஷன்' வேண்டாம்:

இவருக்கு "கீமோதெரப்பி' சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். கேன்சர் நோயாக இருக்கும் என சந்தேகித்த போது, ஆறு முறை "கீமோதெரப்பி' சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர்.

ஏற்கனவே ஆயுர்வேத முறையில் சிகிச்சை எடுத்ததால், தற்போது மூன்று சுழற்சி முறையில் "கீமோதெரப்பி' கொடுத்தால் போதும். நல்லவேளை "ஆப்பரஷேன்' எதுவும் தேவைப்படவில்லை.

வரும் மார்ச் மாத இறுதியில் "கீமோதெரப்பி' சிகிச்சை முடியும். பின் யுவராஜுக்கு மீண்டும் "சிடி' ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும். ஏப்ரலில் முழுமையாக தேறிவிடுவார். மே மாதத்தில் கிரிக்கெட் விளையாடலாம். முன்பைவிட தற்போது உற்சாகமாக இருக்கிறார். மனதளவில் தைரியமாக உள்ளார்.

இவ்வாறு சவுத்ரி கூறினார்.

0 comments:

Post a Comment