வின்னர் தோனி - குவிகிறது பாராட்டு

ஒருநாள் போட்டிகளில் பின் வரிசையில் களமிறங்கி, போட்டியை வென்று தரும் "மேட்ச் வின்னராக' உள்ளார் இந்தியாவின் தோனி. இதை இலங்கை, ஆஸ்திரேலிய அணி கேப்டன்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி நாயகனாக இருப்பது அவ்வளவு எளிதல்ல. "ரன்ரேட்' அதிகமாக தேவைப்படும். பின்வரிசையில் வரும் போது, சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. எப்போதும் ஒரு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும்.

இவை அனைத்தையும் மீறி இந்திய அணி கேப்டன் தோனி, சிறப்பாக செயல்படுகிறார் என்றால், முதல் காரணம் இவரது "கூல்' பாணி தான்.

தற்போதைய முத்தரப்பு தொடரில், கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக "சிக்சர்' அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதே போல இலங்கைக்கு எதிராக 3 ரன்கள் எடுத்து போட்டி "டை' ஆக காரணமாக இருந்தார்.


"சேஸ்' மன்னன்:

தோனியை பொறுத்தவரை இரண்டாவதாக "பேட்' செய்யும் போது அசத்துகிறார். "சேஸ்' செய்த போது 49 இன்னிங்சில் இவரது அபார ஆட்டம் வெற்றிக்கு கைகொடுத்தது. இதில் 2 சதம், 14 அரைசதம் உட்பட 1993 ரன்கள் எடுத்துள்ளார். இதன் சராசரி 104.89 ரன்கள். இந்த 49 இன்னிங்சில் தோனி 30 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், "சேஸ்' செய்த போது 50 முறை அவுட்டாகாமல் இருந்துள்ளார். மொத்தம் இவர் எடுத்த 7 சதம், 44 அரைசதத்தில் பெரும்பாலானவை "சேஸ்' செய்த போது எடுத்தது தான்.


கடின பணி:

கேப்டன், விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் என்ற பணிகளுடன், போட்டியை வெற்றிகரமாக முடித்து தருவதிலும் தோனி கெட்டிக்காரராக உள்ளார்.

இதுகுறித்து இலங்கை அணி கேப்டன் ஜெயர்வர்தனா கூறுகையில்,"" அடிலெய்டு போட்டியில் ஒரு "இன்ச்' அளவில் போட்டியை எங்களிடம் இருந்து தோனி தட்டிப்பறித்தார். அமைதி மற்றும் நிதானமாக செயல்படும் குணம், இவரை வலிமையானவராக மாற்றியுள்ளது,'' என்றார்.


கிளார்க் பாராட்டு:

ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்÷ல் கிளார்க் கூறுகையில்,"" தோனி அசத்தலான வீரர். புள்ளிவிவரங்களை பார்த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம். மெக்கேயின் கடைசி ஓவரில் சிக்சர் அடித்தது மறக்க முடியாதது,'' என்றார்.


எல்லாமே சமம் தான்

நேற்று முன்தினம் இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் சம அளவில் ஸ்கோர் (236/9) எடுத்ததால் முடிவு "டை' ஆனது. இதில் ஸ்கோர் மட்டுமல்ல, பல சமமான ஒற்றுமைகள் அமைந்துள்ளது வியப்பாக உள்ளது.


இதன் விவரம்:

இரு அணிகள் எடுத்த ஸ்கோர்: 236
சந்தித்த ஓவர்கள்: 50
அடித்த பவுண்டரிகள்: 15
விழுந்த விக்கெட்டுகள்: 9
விட்டுக்கொடுத்த உதிரிகள்: 8
பவுலிங் செய்த பவுலர்கள்: 6
அடித்த சிக்சர்கள்: 2
மெய்டன் ஓவர்கள்: 2
"ஸ்டிரைக் ரேட்' 100க்கும் மேல் உள்ள வீரர்கள்: 2
(அஷ்வின், இர்பான் மற்றும் ஹெராத், சேனநாயகே)

0 comments:

Post a Comment