காலை வாருது கிரிக்கெட் - மானம் காக்குது ஹாக்கி

இந்திய ஹாக்கிக்கு நேற்று பொன்னான நாள். லண்டன் ஒலிம்பிக் தகுதி ஹாக்கி தொடரின் பைனலுக்கு பெண்கள், ஆண்கள் அணிகள் முன்னேறின. பரபரப்பான கடைசி லீக் போட்டியில் பெண்கள் அணி, இத்தாலியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஆண்கள் அணி, போலந்தை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேற, தகுதி சுற்று ஹாக்கி போட்டி டில்லியில் நடக்கிறது. நேற்று பெண்கள் பிரிவில் நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா, இத்தாலி அணிகள் மோதின.

இதில் வென்றால் மட்டுமே பைனலுக்கு முன்னேறி, ஒலிம்பிக் கனவை தக்க வைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா இருந்தது. இத்தாலியை பொறுத்தவரை "டிரா செய்தாலே போதும் என்ற நிலையில் களமிறங்கியது.

துவக்கத்தில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய போதும், கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. 9 மற்றும் 17வது நிமிடங்களில் கிடைத்த மூன்று "பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் இந்திய வீராங்கனைகள். 29வது நிமிடத்தில் கிடைத்த நான்காவது வாய்ப்பையும் தவறவிட்டனர். இதனால் முதல் பாதி ஆட்டம் கோல்(0-0) எதுவுமின்றி முடிந்தது.


தொடர் ஆதிக்கம்:

இரண்டாவது பாதியில் இந்திய வீராங்கனைகள் இத்தாலி பகுதியில் தாக்குதல் நடத்தினர். 47வது நிமிடத்தில் இத்தாலி அணிக்கு கிடைத்த "பெனால்டி கார்னர் வாய்ப்பை, இந்தியாவின் சுஷிலா அருமையாக தடுத்தார்.


முதல் கோல்:

பின் இந்தியாவுக்கு 54வது நிமிடத்தில் "பெனால்டி கார்னர் வாய்ப்பு வந்தது. இம்முறை ஜஸ்ஜீத் பந்தை வேகமாக அடித்தார். அதை அப்படியே ரிது ராணி, "ரிவர்சில் அடித்து கோலாக மாற்றினார். இதற்கு கடைசி வரை இத்தாலி அணியால் பதிலடி தர முடியவில்லை. முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்று, பைனலுக்கு முன்னேறியது.

மற்றொரு லீக் போட்டியில் கனடாவை 4-1 என வென்ற தென் ஆப்ரிக்க அணி, பைனலுக்கு முன்னேறியது. நாளை நடக்கும் பைனலில் இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி, லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெறும்.


சந்தீப் அபாரம்:

ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, போலந்தை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் போலந்தின் தாமஸ் "பெனால்டி கார்னர் மூலம் முதல் கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். இதற்கு "பெனால்டி கார்னர் மூலம் இந்தியாவின் சந்தீப் சிங்(26வது நிமிடம்) பதிலடி கொடுத்தார். முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு சிவேந்திர சிங்(59) ஒரு கோல் அடித்தார். போலந்து சார்பில் மிராஸ்லாவ்(63) ஒரு கோல் அடித்தார். பின் இந்தியாவின் ரகுநாத்(65) கோல் அடித்தார்.இறுதியில் சந்தீப் சிங்(70)ஒரு கோல் அடித்து, இந்தியாவின் வெற்றியை <உறுதி செய்தார். இம்முறை நூறு சதவீத வெற்றியுடன் இந்தியா பைனலுக்கு முன்னேறியது.

நாளை நடக்கும் பைனலில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும்பட்சத்தில் இந்திய அணி, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும்.

முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் பைனலுக்கு முன்னேற இந்திய கிரிக்கெட் அணி திணறி வரும் நிலையில், ஹாக்கியில் அசத்தியிருப்பது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

0 comments:

Post a Comment