இஷாந்த் வீழ்ச்சிக்கு காரணம்???

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு இஷாந்த் சர்மாவும் ஒரு காரணம். இவரது பவுலிங் திறனை பார்க்கும் போது, சாண் ஏறினால், முழம் வழுக்கியது போல இருந்தது.

இந்திய அணியில் இடம் பெரும் வீரர்கள், யாரும் திறமை வெளிப்படுத்த முயற்சிக்காமல் இருக்கப் போவதில்லை. இதுபோலத் தான் இஷாந்த் சர்மாவும். 23 வயதான இவர், இதுவரை 44 டெஸ்டில் பங்கேற்று 132 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

சில காலம் "பார்ம்' இல்லாமல் தவித்த இவர், கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 3 போட்டியில் 21 விக்கெட் வீழ்த்தினார்.

அப்போது இஷாந்த் கூறுகையில்,"" ஜாகிரை போல "சுவிங்' செய்ய முயன்றது தான், சமீபத்திய எனது வீழ்ச்சிக்கு காரணம்,'' என்றார்.


தூக்கம் இல்லை:

இதுபோன்ற முயற்சியால் "பார்ம்' இழந்த இஷாந்த் சர்மா, சில காலம் அணியை விட்டு நீக்கப்பட்டு இருந்தார். இதனால் மன அழுத்தத்துக்கு உள்ளான இவர், இரவில் உறக்கம் இல்லாமல் அவதிப்பட்டார்.

நிகழ்கால ஏமாற்றத்தால், எதிர்காலம் குறித்த பயம் இவருக்கு அதிகமானது. இந்திய அணியின் "டாப்' பவுலராக இருந்துவிட்டு, திடீரென காணாமல் போனதால் வெறுத்து விட்டார்.


ஏன் இப்படி?

பவுலிங் செய்யும் போது பந்தின் தையல் பகுதியை சரியாக பிடிக்காதது, தோள்பட்டை சரியான நிலையில் இல்லாததது போன்ற காரணங்களால், இவர் விரும்பிய இடத்தில் பந்தை "பிட்ச்' செய்ய முடியவில்லை. இது ஏன் நடக்கிறது? இதை ஏன் சரிசெய்ய முடியாது என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டுள்ளார்.


மீண்டும் சொதப்பல்:

இதன் விளைவு தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சாதித்தது. இதன் பின் மீண்டும் எழுச்சி பெறுவார் என்று பார்த்தால், மீண்டும் இவரது "ரிதத்தில்' குறை ஏற்பட்டுள்ளதை போலத் தெரிகிறது. ஜாகிர் கானை போல பிரதிபலிக்க முயற்சிப்பதால், இவரது இயல்பான பவுலிங் "ஸ்டைல்' அதிக பாதிப்பு அடைந்துவிட்டது.


பேட்டிங்கிற்கு சாதகம்:

முழு "லைனில்' பந்து வீச முயற்சிப்பதால், இவரது தலை, இடது தோள்பட்டை முழுவதும் சாய்கிறது. இதனால், பேட்ஸ்மேன்கள் பந்தை நன்கு கணித்து, அடிப்பதா அல்லது விலகி விடுவதா என்று முடிவெடுக்க கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்ள ஏதுவாகிறது.

இதன் விளைவு, இங்கிலாந்து தொடரில் 11 விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது. சராசரி 58.18 ஆகி விட்டது. ஆஸ்திரேலிய தொடரில் இந்த சராசரி 81 ஆக அதிகரித்து, விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறியது கண்கூடாகத் தெரிந்தது.

மற்றவர்களை காப்பியடிக்காமல், தனது இயல்பான வழியை பின்பற்றினால் வெற்றிகரமான பவுலராக இஷாந்த் மீண்டும் வலம் வரலாம்.

0 comments:

Post a Comment