சர்ச்சை கிளப்பிய சச்சின் ரன் அவுட்

சிட்னி ஒருநாள் போட்டியில் சச்சினுக்கு "ரன் அவுட்' கொடுக்கப்பட்டதும், டேவிட் ஹசிக்கு "அவுட்' மறுக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவ்விரு சம்பவத்திலும் இந்திய அணிக்கு தான் பாதிப்பு என்பதால், அம்பயர்கள் மீது தோனி குறை கூறினார்.

நேற்று இந்தியா "பேட்' செய்த போது 7வது ஓவரை பிரட் லீ வீசினார். காம்பிர் ஒரு ரன்னுக்காக அழைத்தார். மறுமுனையில் இருந்து சச்சின் ஓடி வரும் போது இடையில் புகுந்த பிரட் லீ தேவையில்லாமல் இடையூறு செய்தார்.

அதற்குள் வார்னர் பந்தை நேரடியாக "த்ரோ' செய்ய சச்சின் ரன் அவுட்டானார். இதற்கு சச்சின் அதிருப்தி தெரிவித்தார். ஆனால், களத்தில் இருந்த அம்பயர்கள் பில்லி பவுடன், சைமன் டாபெல் "அவுட்' கொடுத்தனர்.

முன்னதாக ஆஸ்திரேலியா "பேட்' செய்த போது, 24வது ஓவரை அஷ்வின் வீசினார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க அழைத்தார் மாத்யூ வேட். மறுமுனையில் இருந்து டேவிட் ஹசி ஓடி வரும் போது, ரெய்னா பந்தை எறிந்தார்.

அதனை வலது கையால் தடுத்தார் ஹசி. ரன் அவுட்டில் இருந்து தப்பிக்க, பந்தை கையால் வேண்டுமென்றே தடுப்பது கிரிக்கெட் விதிப்படி தவறு. இதையடுத்து தோனி "அப்பீல்' செய்தார். அம்பயர்கள் பில்லி பவுடன், சைமன் டாபெல் விவாதித்தனர். பின் மூன்றாவது அம்பயர் சைமன் பிரையிடம் கேட்கப்பட்டது.

"தன் மீது பந்துபட்டு காயம் ஏற்படுவதை தவிர்க்க தான் ஹசி தடுத்தார். அவுட்டில் இருந்து தப்புவதற்காக அல்ல,' என்று கூறி "அவுட்டை' மறுத்தார் மூன்றாவது அம்பயர். இதனை ஏற்க மறுத்த தோனி, அம்பயர் பவுடனிடம் நீண்ட நேரம் விவாதித்தார். அப்போது ஹசி 17 ரன்கள் தான் எடுத்திருந்தார். அம்பயர் தயவில் அரைசதம் கடந்து, இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

கடந்த 2008ல் சிட்னி மைதானத்தில் ஹர்பஜன், சைமண்ட்ஸ் இடையிலான "குரங்கு' சண்டை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது ரன் அவுட் பிரச்னையை கிளப்பியுள்ளது.

கேப்டன் தோனி கூறுகையில்,""பிரட் லீயின் செயலில் நியாயமில்லை. இவர், சச்சினுக்கு இடையில் புகுந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. இதனால் கூடுதல் தூரம் ஓடி, ரன் அவுட்டாக நேர்ந்ததால், சச்சின் மிகுந்த ஏமாற்றமடைந்தார். சம்பவத்தை பார்த்த அம்பயர் பில்லி பவுடன் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும்.

டேவிட் ஹசியை பொறுத்தவரை அவர் பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது. தனது முகத்தில் பந்து படுவதை தடுப்பது போல காட்டினார். ஆனால், அவரது கை மிகவும் நீண்டு இருந்தது. பந்தை தடுத்தது நன்கு தெரிந்தது. இவருக்கு ஏன் "அவுட்' தரவில்லை என தெரியவில்லை.

இந்த இரண்டு சம்பவங்களிலும் இந்திய அணிக்கு தான் பாதிப்பு அதிகம். கால்பந்து விளையாட்டில் வீரர்களின் கை, பந்தில் பட்டால் "பெனால்டி' தரப்படும். இதே போல பார்த்தால், டேவிட் ஹசி "அவுட்' தான். மொத்தத்தில் அம்பயர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை.


"பேட்டிங்' காரணம்:

இப்போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு மோசமான "பேட்டிங்' தான் காரணம். 20 ஓவருக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து விட்டோம். யாருமே "பார்மில் இல்லை'.

இவ்வாறு தோனி கூறினார்.

0 comments:

Post a Comment