இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான உலக கோப்பை அரையிறுதி போட்டியைக் காண, முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு அழைப்பு தரப்படவில்லை.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 36 ஆண்டுகளாக நடத்தப்பட்ட வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 4 முறை கோப்பை வென்றது. வெஸ்ட் இண்டீஸ் 2, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன.
கடந்த 1983ல் தொடரில், கேப்டன் கபில் தேவ் தலைமையிலான அணி, முதன் முறையாக இந்தியாவுக்கு உலக கோப்பை பெற்றுத்தந்தார். அதன்பின் இதுவரை இந்திய அணி, இத்தொடரில் கோப்பை வென்றதில்லை.
இத்தனை பெருமைக்குரிய கபில் தேவை, இந்தியா, பாகிஸ்தான் போட்டியை காண, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நேரில் அழைக்காமல் அவமானம் செய்துள்ளது. இதேபோல முன்னாள் வீரர்கள் பிஷன் சிங் பேடி, முகமது அசார் ஆகியோருக்கும் அழைப்பு இல்லையாம்.
இதுகுறித்து கபில் தேவை போனில் தொடர்பு கொண்ட போது,"" டில்லியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியது இருந்ததால், மொகாலி செல்லவில்லை,'' என கோபமாக கூறினார்.
கடந்த 2007ல் உலக கோப்பை தொடரில் இந்திய அணி தோற்றதால், கபில் தேவ் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) என்ற போட்டி அமைப்பை உருவாக்கினார். இதன் சார்பில் "டுவென்டி-20' போட்டிகள் நடந்தன. பின் இந்திய கிரிக்கெட் போர்டுடன் (பி.சி.சி.ஐ.,) சமாதானமாக செல்ல முடிவெடுத்தார்.
இதனால் சமீபத்தில் ஐ.சி.எல்., அமைப்பில் இருந்த, அனைத்து வீரர்களும் விலகினர். இருப்பினும், கபில் தேவின் இந்தச் செயலை, பி.சி.சி.ஐ., இன்னும் மன்னிக்கவே இல்லை.
இதனால் பி.சி.சி.ஐ., தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும், கபில் தேவ் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதனால் தான், மொகாலி போட்டிக்கு, இவருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment