உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கருத்துத் தெரிவித்த முன்னாள், இந்நாள் பிரபலங்கள் எல்லோருமே "இந்தியாவுக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணி பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளதே அதற்குக் காரணம்' எனக் கூறினர்.
1983-ல் கோப்பையை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த கபில்தேவ் கூட, அன்றைய அணியைவிட இன்றைய அணியே மிகச்சிறந்த அணி என்று குறிப்பிட்டார். போட்டி தொடங்குவதற்கு முன் இந்தியாவின் பேட்டிங் வரிசையும் அப்படித்தான் தோற்றமளித்தது.
அதை நிரூபிக்கும் வகையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்திலேயே இந்திய அணி 370
ரன்களைக் குவித்தது. அதில் பெரும்பகுதி இரு தனிப்பட்ட வீரர்களால் (சேவாக் 175, கோலி 100) எடுக்கப்பட்டதாகும்.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் 120 ரன்களை குவித்தார்.அந்த ஆட்டத்தில் இந்தியா 338 ரன்கள் என்ற பெரிய இலக்கை எட்டினாலும், நடுவரிசை பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் கடைசி 7 விக்கெட்டுகளை 33 ரன்களுக்கு இழந்தது. இதனால் அந்த ஆட்டம் டையில் முடிந்தது.
நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியிருப்பார்களானால் வலுவான ஸ்கோர் மட்டுமின்றி, ஆட்டத்தின்போக்கும் இந்தியாவுக்கு சாதகமாக மாறியிருக்கக்கூடும்.
அதன்பிறகு கத்துக்குட்டிகளான அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்ட இந்திய அணி, குறைந்தபட்ச ஸ்கோரை எடுப்பதற்கும்கூட தடுமாறியது. இறுதியில் போராடியே வென்றது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சேவாக் 73, சச்சின் 111, கம்பீர் 69 ரன்கள் குவித்து வலுவான ஸ்கோரை எட்ட உதவியபோதும்கூட, கடைசிக் கட்ட ஓவர்களில் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட வேண்டிய முன்னணி பேட்ஸ்மேன்கள் வருவதும், பெவிலியன் திரும்புவதுமாக இருந்தனர்.
இதன் விளைவு பெரிய ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி 29 ரன்களுக்கு மட்டும் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. 296 ரன்கள் என்பது வெற்றிக்குப் போதுமான ஸ்கோர் என்றாலும், இந்திய பந்துவீச்சின் பலவீனத்தை சரியாகப் பயன்படுத்திய தென் ஆப்பிரிக்காவின் கடைநிலை வீரர்கள் அந்த அணிக்கு வெற்றி தேடித்தந்தனர். எதிரணியின் பின்வரிசை வீரர்கள் சிறப்பாக ஆடிய அதேசமயம், இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பில்லாமல் ஆடியது இந்திய அணியின் பலவீனத்தையே வெளிப்படுத்துவதாக அமைந்தது.
போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணியின் பீல்டிங் மோசமாக உள்ளதாகக் கூறப்பட்டது.
பின்னர் பந்துவீச்சு மோசமானது. இப்போது பலமான பேட்டிங்கும் பலவீனமாகத் தொடங்கியுள்ளது. சச்சினும், சேவாக்குமே தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வருகின்றனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் களமிறங்கிய பாகிஸ்தான், தொடர் தோல்விகளுக்குப் பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணிகள் கூட அற்புதமாக விளையாடி அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
பல அணிகளில் சிறப்பான தொடக்க வீரர்கள் இல்லாதபோதும் கூட, தனி ஒரு வீரரை நம்பியில்லை. முக்கிய வீரர்கள் சரியாக விளையாடாதபோதும் பின்வரிசையில் வரும் வீரர்கள் நெருக்கடிக்கு மத்தியிலும் கூட சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடித்தந்து வருகின்றனர்.
ஆனால் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைந்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதை பயன்படுத்திக் கொள்ள தவறிவிடுகின்றனர். இப்போதைய இந்திய அணி தனியொரு சச்சினையும், சேவாக்கையும் நம்பித்தான் உள்ளதோ என்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ள நிலையில், சோதனை அடிப்படையில் பந்துவீச்சாளர்களை மாற்ற கேப்டன் தோனி தயங்குவது ஏன் என்பது தெரியவில்லை.
பியூஷ் சாவ்லாவுக்கு மாற்று பந்துவீச்சாளராக அஸ்வின் இருந்தபோதும் கூட அவருக்கு இதுவரை தோனி வாய்ப்பு அளிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் நீங்கலாக வேறு எந்த ஆட்டத்திலும் பியூஷ் சாவ்லா ஜொலிக்கவில்லை. மாறாக ரன்களை வாரி வழங்கினார்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் மோசமாக பந்துவீசினார் என்பதற்காக இதுவரை அவருக்கு அடுத்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.
2007-ல் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் அந்த அணி வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்தபோது, தொடக்க வீரர்கள் கில்கிறிஸ்ட், ஹேடன் ஆகியோரை வெளியேற்றி திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ஸ்ரீசாந்த் என்பது தோனிக்கு தெரியாததல்ல.
கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடி வரும் சுரேஷ் ரெய்னாவும் தற்போது ஓரம் கட்டப்பட்டுள்ளார். அவர் மிடில் ஆர்டரில் மட்டுமின்றி எந்த நிலையிலும் ஆடக்கூடியவர்.
இப்போதுள்ள இக்கட்டான சூழலில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலுமே கண்டிப்பாக சில மாற்றங்களை செய்வதே புத்திசாலித்தானம். இல்லையென்றால் இந்திய அணி நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
காலிறுதிச்சுற்று நாக் அவுட் சுற்று என்பதால் ஒவ்வோர் ஆட்டத்திலும் வென்றால் மட்டுமே அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேற முடியும். இனியாவது இந்திய அணி எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
0 comments:
Post a Comment