உலக கோப்பை போட்டிகளில் பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பும் இந்திய அணியின் கேப்டன் தோனி, அரையிறுதியில் எழுச்சி பெற வேண்டிய நேரம் வந்துள்ளது.
உலக கோப்பை தொடருக்கான இந்திய அணித்தேர்வில், தேர்வாளர்களுடன் தகராறு, அம்பயர் மறுபரிசீலனை விதி (டி.ஆர்.எஸ்.,) குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் மோதல் (ஐ.சி.சி.,) என, தோனி களத்துக்கு வெளியே மிகவும் "பிசியாக' இருக்கிறார்.
இதனால் தான் தனது பேட்டிங்கில் இவர் கவனம் செலுத்த வில்லை என, எல்லோரும் நினைக்கின்றனர்.
இதுவரை தோனி பங்கேற்ற 7 போட்டிகளில் 125 ரன்கள் (31, 34, 19*, 12*, 22 மற்றும் 7) மட்டுமே எடுத்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இவர் பேட்டிங் செய்யவில்லை. கடைசியாக பங்கேற்ற 12 போட்டிகளில் இவரது சராசரி 22 ரன்கள் தான்.
முக்கியமான நேரத்தில் களமிறங்கும் இவர், திடீரென அவுட்டாகி அணியை அந்தரத்தில் விட்டுவிட்டு, பெவிலியன் சென்று விடுகிறார். அயர்லாந்துக்கு எதிராக வெற்றிக்கு 40 ரன்கள் தேவை என்ற நிலையில், அவுட்டானார். பின் வந்த யூசுப் பதான் கைகொடுத்ததால், எளிதாக வெல்ல வேண்டிய போட்டியை சிரமப்பட்டு ஜெயிக்க முடிந்தது.
தவறான "அவுட்':
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், தேவையில்லாமல் ஓடிய காம்பிர் அவுட்டானவுடன் களத்துக்கு வந்தார் தோனி. இதில் 7 ரன்கள் எடுத்த போது, கிளார்க்கிடம் எளிதாக "கேட்ச்' கொடுத்து திரும்பினார். இது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்தது.
தோனியின் அவுட் காரணமாக, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பலர், மெல்ல கிளம்பினர். ஆனால், ரெய்னா ஓரளவுக்கு "கம்பெனி' கொடுக்க, இந்திய அணி அரையிறுதிக்கு சென்றது.
கடந்த 2005ல் முதன் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், "ஹெலிகாப்டர்' ஷாட்டை அறிமுகம் செய்து சதம் அடித்து அசத்தினார். இப்போது, உலக கோப்பை அரையிறுதியில், மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக, தோனி எழுச்சி காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோனிக்கு ஆதரவு:
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வெங்சர்க்கார் கூறுகையில்,"" தோனியின் பேட்டிங் சூழ்நிலையை பொறுத்து அமைகிறது. ஒருநாள் போட்டியை பொறுத்தவரையில், "பார்ட்னர்ஷிப்' எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்து தான் அணியின் வெற்றி அமைகிறது. இதில் தோனி சிறப்பாக செயல்படுகிறார்.
அணிக்கு எப்போது தேவையோ, அப்போது அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார். தவிர, தற்போது அணியில் நிறைய "மேட்ச் வின்னர்கள்' உள்ளனர். இதனால் தோனி குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை,'' என்றார்.
0 comments:
Post a Comment