சச்சினுக்கு நேர்மாறான பாண்டிங்

கிரிக்கெட் போட்டிகளில் "அவுட்' என்று தெரிந்தால், உடனடியாக வெளியேறி நேர்மையாக நடந்து கொள்வார் இந்தியாவின் சச்சின். இதற்கு நேர்மாறான குணத்தை கொண்டுள்ளார் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்.

சென்னையில் நடந்த வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் சச்சின், 100 வது சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 ரன் எடுத்த நிலையில், ராம்பால் பந்தில் அவுட்டானார்.

பந்து தனது பேட்டில் பட்டு, கீப்பர் பிடித்தது உறுதியாக தெரிந்ததால், அம்பயரின் முடிவுக்கு காத்திருக்காமல், உடனடியாக களத்தை விட்டு வெளியேறி, நேர்மையாக நடந்து கொண்டார்.

இதற்கு நேர்மாறாக பாண்டிங்கின் நடத்தை உள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிராக, ரன் அவுட்டான விரக்தியில், டிரசிங் அறையில் இருந்த "டிவி'யை உடைத்து, பின் அபராதம் கட்டினார்.

கனடாவுக்கு எதிரான போட்டியில், "கேட்ச்' செய்யும் போது சக வீரர் ஸ்டீபன் ஸ்மித் தெரியாமல் மோதினார். இதை பெருந்தன்மையுடன் மன்னிக்காத பாண்டிங், ஸ்மித் மீது உள்ள கோபத்தை, பந்தை தரையில் எறிந்து வெளிப்படுத்தினார்.

பின் மறுநாள் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

தொடர்ந்து மோசமாக நடந்து கொள்ளும் பாண்டிங், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இப்படித் தான் செய்தார். இதில் முகமது ஹபீஸ் பந்தில் கம்ரான் அக்மலிடம் பிடி கொடுத்தார். இது எல்லோருக்கும் தெரிந்தது.

ஆனாலும் அம்பயர் அவுட் கொடுக்காததால், களத்தை விட்டு வெளியேறாமல் இருந்தார். பின் அம்பயர் மறு பரிசீலனை முறையில் "அவுட்' கொடுக்கப்பட்ட பின்பே, பெவிலியன் திரும்பினார்.

இதுகுறித்து பாண்டிங் கூறுகையில்,"" பந்து பேட்டில் பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இது எனக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் அம்பயர் முடிவுக்காக காத்திருந்தேன். எனது வழக்கமான ஆட்டம் எப்போதுமே இப்படித்தான் இருக்கும்,'' என்றார்.

0 comments:

Post a Comment