தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை அநியாயமாக கோட்டை விட்டது, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடைசி 9 விக்கெட்டுகளை வெறும் 29 ரன்களுக்கு இழந்தது.
பீல்டிங், பவுலிங்கில் சொதப்பியது போன்றவை வீழ்ச்சிக்கு வித்திட்டது. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை "டை' செய்த நம்மவர்கள், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. கேப்டன் தோனியின் தவறான உத்திகள் தொடர்வது மிகுந்த கவலை அளிக்கிறது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில், அயர்லாந்து, நெதர்லாந்துக்கு எதிராக "வீராப்பு' காட்டிய இந்திய அணி, சமபலம் வாய்ந்த மற்ற அணிகளிடம் திணறியது.
நேற்று முன் தினம் நாக்பூரில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவிடம் வீணாக வெற்றியை பறிகொடுத்தது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு சச்சின்(111), சேவக்(73), காம்பிர்(69) நல்ல அடித்தளம் அமைத்தனர். அடுத்து வந்தவர்கள் சொதப்ப, கடைசி 9 விக்கெட்டுகளை 29 ரன்களுக்கு இழந்தது. 48.4 ஓவரில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தவறான முடிவு:
இப்போட்டியில் யூசுப் பதானை முன்னதாகவும், விராத் கோஹ்லியை தாமதமாகவும் களமிறக்கி "பேட்டிங் ஆர்டரில்' வீண் குழப்பத்தை ஏற்படுத்தினார் தோனி. பின் பந்துவீச்சிலும் தவறான உத்தியை கையாண்டார். ஹர்பஜன் வசம் ஒரு ஓவர் இருந்த நிலையில், நெஹ்ராவிடம் கடைசி ஓவரை வீணாக கொடுத்தார். இதனை பயன்படுத்திய ராபின் பீட்டர்சன் சிக்சர், பவுண்டரிகளாக விளாச, தென் ஆப்ரிக்கா 49.4 ஓவரில் 300 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
அணியில் மாற்றம்:
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி "டை' ஆன போது, இந்திய அணி சுதாரித்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. தென் ஆப்ரிக்க அணியில் கூட போத்தா, ராபின் பீட்டர்சன் என இரண்டு பிரதான "ஸ்பின்னர்கள்' இடம் பெற்றனர்.
ஆனால், இந்திய அணியில் ஹர்பஜன் மட்டும் வாய்ப்பு பெற்றார். தோனிக்கு மிகவும் பிடித்த பியுஸ் சாவ்லா நீக்கப்பட்ட நிலையில், அஷ்வினுக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம். இதே போல யூசுப் பதான் கடந்த போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. இவருக்கு பதிலாக சுரேஷ் ரெய்னாவுக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம்.
தவிர, பேட்டிங் "பவர்பிளேயில்' எப்படி விளையாடுவது என்று தெரியவில்லை. மற்ற அணிகள் எல்லாம் இந்த நேரத்தில் ரன் மழை பொழியும் போது, இந்திய அணி மட்டும் விக்கெட்டுகளை மடமடவென இழக்கிறது. இதன் காரணமாக "ஓபனிங்' நன்றால் இருந்தாலும், "பினிஷிங்' மோசமாக அமைகிறது.
இத்தவறை போக்குவதற்கு பயிற்சியாளர் கிறிஸ்டன் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, அணியில் அதிரடி மாற்றங்களை செய்ய தவறினால், தோனியின் தலைமை பதவி குறித்து கேள்வி எழும். இவர், சூழ்நிலைக்கு ஏற்றவாறு உத்திகளை மாற்றி, அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
உலக கோப்பை விற்க பட்டுவிட்டது... தயவு செய்து...உங்கள் வேலையை பாருங்கள்....நேரத்தை வீண் செய்யாதிர்கள்....
ReplyDelete