வலுவற்ற இந்திய சுழற் பந்துவீச்சு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் செவ்வாய்க்கிழமை வரை 24 ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.


தொடக்கத்தில் சில ஆட்டங்களில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், மெல்ல மெல்ல பந்துவீச்சாளர்களும் தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர்.


இந்திய ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 315 ஆட்டங்களில் விளையாடி 306 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிதி (4 ஆட்டங்களில் 15 விக்கெட்), உலகக் கோப்பையில்தான் முதல் முறையாக களம் கண்ட தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் (3 ஆட்டம், 11 விக்கெட்) ஆகியோர் பட்டியலில் முதலிரண்டு இடத்தைப் பிடித்துள்ளனர்.


ஒரு காலத்தில் சுழற் பந்துவீச்சு என்றாலே இந்தியாதான் என்ற நிலை இருந்தது. உலகப் புகழ்பெற்ற சுழற் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர்.


சுபாஷ் குப்தே (36 டெஸ்ட், 149 விக்கெட்), பிஷன் சிங் பேடி (67-266), சந்திரசேகர் (58-242), பிரசன்னா (49-189), வெங்கட்ராகவன் (57-156), அனில் கும்ப்ளே (132-619, 271 ஒரு தின ஆட்டம், 337 விக்கெட்), திலிப் தோஷி (33-114) போன்ற சுழற் பந்துவீச்சாளர்கள் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தனர்.


இந்திய அணிக்கு புகழ் பெற்ற பல வெற்றிகளை அவர்கள் பெற்றுத் தந்துள்ளனர். அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த இந்திய அணி, சுழற் பந்துவீச்சாளர்கள் பற்றாக்குறையால் இப்போது திணறி வருகிறது.


ஹர்பஜன் அளவுக்கு புகழ் பெறாத மேற்கிந்தியத் தீவுகளின் சுலைமான் பென் (3 ஆட்டம், 8 விக்.), இங்கிலாந்தின் ஸ்வான் (4 ஆட்டம், 7 விக்.), கனடாவின் பாலாஜி ராவ் (4 ஆட்டம், 7 விக்.), தென் ஆப்பிரிக்காவின் ராபின் பீட்டர்சன் (3 ஆட்டம், 5 விக்.), அயர்லாந்தின் டாக்ரெல் (3 ஆட்டம், 5 விக்.), ஜிம்பாப்வேயின் ரேமண்ட் பிரைஸ் (3 ஆட்டம், 4 விக்.) ஆகியோர் கூட இந்த உலகக் கோப்பை போட்டியில் ஓரளவு முத்திரை பதித்துள்ளனர் என்றே சொல்லலாம்.


ஆனால், 2001-ல் ஆஸ்திரேலிய அணியை கதிகலங்க வைத்தவரும், 93 டெஸ்டுகளில் 393 விக்கெட்டுகளையும், 220 ஒரு தின ஆட்டங்களில் 248 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளவருமான ஹர்பஜன் சிங், இந்த உலகக் கோப்பையில் இதுவரை 3 ஆட்டங்களில் 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.


அதுவும் அயர்லாந்துக்கு எதிராக அவரால் 9 ஓவர் வீசியும் விக்கெட் எதையும் வீழ்த்த முடியவில்லை; வங்கதேசத்துக்கு எதிராக ஒரே ஒரு விக்கெட் வீழ்த்தினார்.


மற்றொரு சுழற் பந்துவீச்சாளரான பியூஷ் சாவ்லா அயர்லாந்து (0-56), இங்கிலாந்துக்கு (2-71) எதிராக மிகவும் மோசமாகப் பந்துவீசினார் என்றே கூறலாம். 2008 ஜூலையில் பாகிஸ்தானுடனான ஆட்டத்துக்குப் பின் சுமார் இரண்டரை ஆண்டுகளில் கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரே ஒரு ஆட்டத்தில் சாவ்லா பங்கேற்றுள்ளார்.


அவர் உலகக் கோப்பை போட்டிக்குத் தேர்வானபோதே பலர் தங்கள் வியப்பை வெளிப்படுத்தினர்.


பகுதி நேர சுழற் பந்துவீச்சாளர்களான யுவராஜ் சிங் (அயர்லாந்து ஆட்டம் நீங்கலாக), யூசுப் பதான் ஆகியோரும் எதிர்பார்த்தபடி விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.


ஜாகீர் கான் தவிர மற்ற வேகப் பந்துவீச்சாளர்களும் எதிர்பார்த்த அளவு பிரகாசிக்காத நிலையில், இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டுமானால், சுழற் பந்துவீச்சாளர்களையே நம்பி உள்ளது.


அற்புதமான சுழற் பந்துவீச்சு பாரம்பரியத்துக்கு சொந்தமான இந்திய அணியின் இப்போதைய சுழற் பந்துவீச்சாளர்கள் இனிவரும் ஆட்டங்களிலாவது தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

0 comments:

Post a Comment