4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் வருகிற 4-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது.
விரல் காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் இந்திய கேப்டன் டோனி ஆடவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் விராட் கோலி பிரிஸ்பேன் டெஸ்டுக்கு கேப்டனாக செயல்பட உள்ளார். அப்போது அவர் இந்தியாவின் 32-வது டெஸ்ட் கேப்டன் என்ற சிறப்பை பெறுவார்.
இதற்கிடையே ஆஸ்திரேலிய ரசிகர்களும், அங்குள்ள ஊடகத்தினரும் விராட் கோலியை குறி வைக்க தொடங்கி விட்டனர். கடந்த சுற்றுப்பயணத்தின் போது சிட்னி டெஸ்டில் ரசிகர்களின் கேலிக்குள்ளான அவர் ஆத்திரத்தில் அவர்களை நோக்கி நடுவிரலை காட்டி எச்சரித்தார்.
இதனால் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள் என்றும், பிரிஸ்பேனில் கோலிக்கு சிக்கல் காத்திருக்கிறது என்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதே போல் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடிலும், ‘பிரிஸ்பேனில் கூடும் ரசிகர்கள் ரவுடிகள். கோலி அவர்களின் வசை மொழிகளுக்கு உள்ளாக நேரிடும். நிச்சயம் அவருக்கு கடும் நெருக்கடி இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில் நேற்று அடிலெய்டில் நிருபர்களை சந்தித்த 26 வயதான விராட் கோலி கூறியதாவது:- பீட்டர் சிடிலுக்கு எதிராக நான் விளையாடியிருக்கிறேன். அவர் கடும் சவால் அளிக்க கூடிய ஒரு பந்து வீச்சாளர். போட்டி தொடங்குவதற்கு முன்பே அவர்கள் (ஆஸ்திரேலியர்கள்) வம்பு இழுக்க தொடங்கியிருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.
அதை எல்லாம் நான் மனதில் வைத்துக் கொள்ளவில்லை. மிட்செல் ஜான்சன் அபாயகரமான பந்து வீச்சாளர். அவர் உண்மையிலேயே சிறப்பாக பந்து வீசி வருகிறார். அதை நாங்கள் அறிவோம். வேகத்துடன் கூடிய பவுன்ஸ் ஆடுகளங்களில் அவரது பந்து வீச்சை சமாளிப்பதற்கான போதுமான யுக்திகள் எங்களிடம் உள்ளன.
ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எங்களால் நல்ல போட்டி கொடுக்க முடியும். கேப்டனாக இருப்பதையும், அணியை வழிநடத்துவதையும் எப்போதும் நான் நேசிக்கிறேன். அணியை முன்னெடுத்து செல்வதில் ஆர்வமுடன் இருக்கிறேன்.
பிறகு ஏன் கேப்டன்ஷிப்புக்குரிய சவால்களை என்னால் சமாளிக்க முடியாது? அணி வீரர்களின் திறமை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அணி வீரர்களை நான் எப்படி வழிநடத்தப் போகிறேன், வித்தியாசமான சூழ்நிலையை எப்படி திறம்பட கையாளப்போகிறேன் உள்ளிட்டவை எல்லாம் என்னை சார்ந்து தான் இருக்கிறது.
அணி வீரர்கள் எனக்கு பக்கபலமாக இருக்கும்பொழுது, விரும்புகிற மாதிரியான திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில், இறுதியில் நல்ல முடிவே கிடைக்கும். அதைத் தான் நான் எதிர்நோக்கியுள்ளேன்.
ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வருவதை கேள்விப்பட்டேன். ஆனால் அவரது காயத்தன்மை மோசமானதா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக ஒரு கிரிக்கெட் வீரர் காயத்தால் அவதிப்படுவது துரதிர்ஷ்டசமானது.
இவ்வாறு விராட் கோலி கூறினார்.
0 comments:
Post a Comment