சர்வதேச கிரிக்கெட்டில் நேற்று கருப்பு நாளாக அமைந்தது. ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த பிலிப் ஹியுஸ், கடைசி வரை நினைவு திரும்பாமல் மரணம் அடைந்தார். இதனால், கிரிக்கெட் உலகம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் முதல் தர போட்டி ‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடர். இதில் நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலிய அணிகள் மோதின. அப்போது, சியான் அபாட் வீசிய ‘பவுன்சர்’, தெற்கு ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ், 25, தலையில் பலமாக தாக்கியது.
உடனடியாக நிலை குலைந்த இவர், நினைவு இழந்து கீழே சரிந்தார். செயின்ட் வின்சன்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவருக்கு, தலையில் ‘ஆப்பரேஷன்’ செய்யப்பட்டது.
மூளைக்கு ஏற்படும் அதிர்ச்சியை தடுக்கும் வகையில், தொடர்ந்து ‘கோமா’ நிலையில் வைக்கப்பட்டிருந்தார். 48 மணி நேரத்துக்குப் பின் தான் எதுவும் சொல்ல முடியும் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.
மூளையில் தொடர்ந்து ரத்தக் கசிவு இருந்த நிலையில், மருத்துவ கருவிகள் உதவியுடன் தாக்குப்பிடித்து வந்தார். ஆனால், இவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. சிகிச்சை பலன் அளிக்காத நிலையில், நினைவு திரும்பாமலேயே, நேற்று ஹியுஸ் மரணம் அடைந்தார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி டாக்டர் பீட்டர் புருக்னர் கூறுகையில்,‘‘ஹியுஸ் மரணச் செய்தியை அறிவிப்பது சோகமாக உள்ளது. மிகவும் அரிதான விதத்தில், இவரது கழுத்து பகுதியில் பந்து தாக்கியுள்ளது.
இதில், தமனியில் பிளவு ஏற்பட, மூளையில் அதிகமான ரத்தக் கசிவு ஏற்பட்டு மரணத்தை சந்தித்துள்ளார். கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்த இவருக்கு, கடைசி வரை நினைவு திரும்பவில்லை. இறக்கும் முன் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உடன் இருந்தனர்,’ என்றார்.
ஹியுஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், இவரது நெருங்கிய நண்பர் மற்றும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க், உடன் இருந்தார். ஹியுஸ் மரணத்தை அறிந்து கிளார்க், ஹாடின், வாட்சன் என, பலரும் பெரும் சோகத்துடன் காணப்பட்டனர்.
பின், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் உள்ளிட்ட சக வீரர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினர். ஹியுசிற்கு ‘பவுன்சர்’ வீசிய அபாட்டும், கனத்த இதயத்துடன் கிளம்பினார்.
26க்கு முன் வந்த எமன்
ஹியுசின் 26வது பிறந்த நாள் நவ. 30ல் வருகிறது. இதுவரை முதல் தர போட்டிகளில் 26 சதம் அடித்துள்ள இவர், நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் எடுத்திருந்தார்.
இன்னும் சில நாட்களில் தனது பிறந்த நாள் வரவுள்ள நிலையில், தொடர்ந்து அசத்தி, 27வது முதல் தர சதம் அடிக்க திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், துரதிருஷ்டவசமாக பந்து தாக்கி, மரணம் அடைந்தார்.
0 comments:
Post a Comment