ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கு ஒத்திவைப்பு

ஐ.பி.எல்., சூதாட்ட வழக்கு விசாரணையை வரும் 14 ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.

ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் (2013) ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் உள்ளிட்ட வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) நடத்திய விசாரணையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்தது.

ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் ஒரு குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. இதில் நிலே தத்தா, நாகேஷ்வர ராவ், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இடம் பெற்றிருந்தனர். இதன் முதற்கட்ட விசாரணை அறிக்கை, கடந்த பிப்.,10ல் தாக்கல் ஆனது. 


நீண்ட விசாரணை:

இதில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் மற்றும் இந்திய அணி கேப்டன் தோனி, ரெய்னா உட்பட 13 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டன. இதையடுத்து, பி.சி.சி.ஐ., தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கினார் சீனிவாசன். 

தவிர, சூதாட்டம் குறித்து தொடர்ந்து விசாரித்த முத்கல் குழு இந்திய அணி கேப்டன் தோனி, ரெய்னாவிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தியது.

முத்கல் குழு விசாரணையின் இறுதி அறிக்கையை, கடந்த 3ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில்  தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, தாக்கூர் அடங்கிய ‘பெஞ்ச்’ முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, முத்கல் அறிக்கையை இன்னும் முழுவதுமாக படிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. எதிர்தரப்பு சார்பில் பீகார் கிரிக்கெட் சங்க தலைவர் ஆதித்ய வர்மா, சூதாட்ட அறிக்கையை அனைவரும் பார்க்கும் வகையில் வெளியிட வேண்டும் என்றார்.

இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தவிர, முத்கல் அறிக்கையில் எதுவும் இல்லை என்றால், சீனிவாசன் பி.சி.சி.ஐ., தலைவராக வர அனுமதிக்க வேண்டும் என, மீண்டும் கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்று விசாரணை அறிக்கையை வெளியிடுவது குறித்து சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யும் எனத் தெரிகிறது.

0 comments:

Post a Comment