சச்சினுக்கு கங்குலி ஆதரவு



சச்சினின் 200வது டெஸ்ட் போட்டியை, அவரது சொந்த மண்ணான மும்பையில் நடத்துவது தான், அவருக்கு மரியாதை செலுத்துவது போல இருக்கும்,'' என, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்தார். 

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் "சதத்தில் சதம்' அடித்து சாதனை படைத்தார். இதுவரை 198 டெஸ்டில் 15,837 ரன்கள் எடுத்துள்ளார். 

இவர், சொந்த மண்ணில் 200வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வகையில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) ஏற்பாடு செய்து வருகிறது. இதன்படி, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், வரும் அக்., 31ல் துவங்குகிறது. 

இதில், இரண்டு டெஸ்ட் போட்டிகளை கோல்கட்டா மற்றும் மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், கோல்கட்டா கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,), மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) என, இருவருமே சச்சினின் வரலாற்று சிறப்பு மிக்க 200வது டெஸ்ட் போட்டியை, தங்களது மண்ணில் நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கங்குலி கூறியது:

சச்சினின் சொந்தமண் மும்பை. இங்கு தான் இவரது அனைத்து நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், தனது 200வது டெஸ்ட் போட்டியை மும்பையில் விளையாடினால், அது உணர்ச்சிப் பூர்வமாக இருக்கும். தவிர, அவரது விருப்பத்தை நிறைவேற்றியது போல இருக்கும். 


மீண்டும் வராது:

இதுபோன்ற சம்பவம் மீண்டும் வரப்போவதில்லை. இப்போதைய நிலையில், உலக கிரிக்கெட்டில் இந்த சாதனையை எந்த ஒரு வீரராலும், எப்போதும் முறியடிக்க முடியாது. இப்படிப்பட்ட சிறப்பான நிகழ்வு நடக்கும் போது, இதைக் காண நாம் எல்லோரும் அங்கு இருக்க வேண்டும்.

இது ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக அமையும். சச்சினும் இந்த தருணத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டும். இப்போட்டியில் பேட்டிங்கில் திணறக் கூடாது. அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, புகழின் உச்சத்தில் இருக்கும் போதே ஓய்வு வேண்டும்.


நிரப்ப முடியாது:

சச்சின் ஓய்வுக்குப் பின், இவரைப் போன்ற வீரரை ஒருபோதும் பார்க்க முடியாது. அவர் விட்டுச் செல்லும் வெற்றிடத்தை நிரப்புவது என்பது மிக கடினம். எதிர்வரும் தொடரில் சச்சின் சிறப்பாக விளையாட வேண்டும். ஒருவேளை சதம் அடித்து சச்சின் ஓய்வு பெற்றால், இப்போது விமர்சனம் செய்பவர்கள், இன்னும் கொஞ்சம் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று பேசுவர். 

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், 40 வயதில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார். இதற்காக இவரை சச்சினுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது. ஏனெனில், அது தனிமனித விளையாட்டு. கிரிக்கெட் அப்படியல்ல சரியாக விளையாடவில்லை எனில் தேர்வு செய்ய மாட்டார்கள்.


கடின காலம்:

சமீபத்திய சூதாட்ட புகார்களால் இந்திய கிரிக்கெட்டுக்கு கடின காலம் தான். எனினும், இதிலிருந்து இந்தியா கட்டாயம் மீண்டு வரும். ஆனால், அடுத்து வரும் 16 மாதங்கள், தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்கள் என, இந்திய அணிக்கு தொடர்ந்து சோதனை காத்திருக்கிறது. 

இவ்வாறு கங்குலி கூறினார்.

0 comments:

Post a Comment