இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்



அடுத்த ஆண்டு இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 55 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) நேற்று அறிவித்தது.

கோல்கட்டாவில் நடந்த இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) செயற்குழு கூட்டத்தில், அடுத்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து இத்தொடருக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு (இ.சி.பி.,) நேற்று வெளியிட்டது. 

இதன்படி, இந்தியா, இங்கிலாந்து அணிகள் அடுத்த ஆண்டு ஜூன் 26ம் தேதி முதல் செப்., 7ம் தேதி வரை ஐந்து டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச "டுவென்டி-20' தொடரில் பங்கேற்க உள்ளது. இதன்மூலம், 55 ஆண்டுகளுக்கு பின், முதன்முறையாக இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. 

முன்னதாக 1959ல் இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடின. இதில் இங்கிலாந்து அணி 5-0 என தொடரை முழுமையாக கைப்பற்றியது. 

கடைசியாக 2011ல் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் 4-0 என தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி, டெஸ்ட் ரேங்கிங்கில் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது.

பயிற்சி போட்டிகள்: டெஸ்ட் போட்டிகள், டிரன்ட் பிரிட்ஜ், லார்ட்ஸ், ஏஜியஸ் பவுல், ஓல்டு டிராபோர்டு மற்றும் ஓவல் மைதானங்களில் நடக்கிறது. டெஸ்ட் தொடருக்கு முன், இந்திய அணி, இரண்டு பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது. 

இங்கிலாந்தில் உள்ளூர் அணிகளான லீசெஸ்டர்ஷயர், டெர்பிஷயர் அணிகளுக்கு எதிராக மூன்று நாட்கள் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. 

இதேபோல, ஒருநாள் தொடருக்கு முன், மிடில்சக்ஸ் அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் 50 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டிகள், பிரிஸ்டோல், சோபியா கார்டன்ஸ், டிரன்ட் பிரிட்ஜ், எட்பாஸ்டன், ஹெட்டிங்லி மைதானங்களில் நடக்கிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தலைமை அதிகாரி டேவிட் கூலியர் கூறுகையில், ""55 ஆண்டுகளுக்கு பின், இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும்,'' என்றார்.

0 comments:

Post a Comment