200-வது டெஸ்ட் போட்டியுடன் தெண்டுல்கர் ஓய்வு பெற நிர்ப்பந்தமா?


இந்திய கிரிக்கெட் அணியின் இதயம் போன்றவர் சச்சின் தெண்டுல்கர். சாதனை படைக்கவே பிறந்தவரான தெண்டுல்கரின் சாதனை பட்டியல் அனுமாரின் வாலையும் மிஞ்சும் எனலாம். தனது சாதனை சரித்திரத்தில் தெண்டுல்கர் மேலும் ஒரு மகுடத்தை சேர்க்க இருக்கிறார். 

40 வயதான தெண்டுல்கர், 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், டெஸ்ட் போட்டியில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். ஒவ்வொரு தொடரின் போது தனது உடல் தகுதியை ஆராய்ந்து அதற்கு தகுந்தபடி ஆடுவது பற்றி முடிவு எடுப்பேன் என்று ஏற்கனவே தெண்டுல்கர் தெரிவித்து இருக்கிறார். 

1989-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 16 வயது பாலகனாக அறிமுகமான தெண்டுல்கர் இதுவரை 198 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறார். நவம்பர் மாதத்தில் இந்தியா வந்து 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் களம் காண தெண்டுல்கர் தன்னை தயார்படுத்தி வருகிறார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி தெண்டுல்கருக்கு 200-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை எந்தவொரு வீரரும் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இல்லை. தெண்டுல்கருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிக்கி பாண்டிங், ஸ்டீவ்வாக் ஆகியோர் 168 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கின்றனர். 

200-வது டெஸ்ட் போட்டியுடன் தெண்டுல்கரை ஓய்வு பெறும்படி, இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் அறிவுரை வழங்கியதாகவும், 200-வது டெஸ்டுக்கு பிறகும் விளையாட விரும்பினால், ரன் குவிப்பின் அடிப்படையில் தான் தெண்டுல்கருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. 'எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ள தெண்டுல்கரை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றாலும் பல சிறந்த இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்புக்காக காத்து இருப்பதால் தெண்டுல்கரிடம் ஓய்வு ஆலோசனை தெரிவிக்கப்பட்டு இருப்பதாக பெயர் வெளியிட விரும்பாத தேர்வாளர் கூறியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமும், தேர்வு குழு தலைவரும் இந்த செய்தியை உடனடியாக மறுத்துள்ளனர். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய சீனியர் அதிகாரி ராஜீவ் சுக்லா கருத்து தெரிவிக்கையில், 'தெண்டுல்கர் ஓய்வு குறித்து வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் கிடையாது. நாங்கள் தெண்டுல்கர் மற்றும் தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் ஆகிய இருவரிடமும் பேசினோம். அவர்களுக்கு இடையில் அப்படி எந்தவித பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. ஓய்வு குறித்து வீரர் தான் முடிவு செய்ய முடியும். இது தான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கொள்கையாகும். தெண்டுல்கரின் 200-வது டெஸ்ட் போட்டியை தங்கள் மாநிலத்தில் நடத்த பல மாநில கிரிக்கெட் சங்கங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஸ்டேடியத்தில் அதிக இருக்கை வசதி கொண்ட மும்பை மற்றும் கொல்கத்தாவுக்கு தான் இந்த போட்டியை நடத்த அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த விஷயத்தில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை' என்றார். 

இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் சந்தீப் பட்டீல் அளித்த விளக்கத்தில், 'தெண்டுல்கரை சந்திப்பது எப்பொழுதும் மகிழ்ச்சி அளிக்கும். ஆனால் கடந்த 10 மாதங்களாக நான் தெண்டுல்கரை சந்திக்கவில்லை. அவரிடம் டெலிபோனில் கூட பேசியதில்லை. அவரும் என்னுடன் பேசவில்லை. நாங்கள் இருவரும் எதுபற்றியும் விவாதிக்கவில்லை. வெளியான தகவல் அனைத்தும் முட்டாள்தனமானது' என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment