நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாடுங்கள் சச்சின்

நூறாவது சதத்துக்காக சச்சின் ஆடிய ஆமை வேக ஆட்டம், ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வங்கதேசம் போன்ற பலம் குன்றிய அணி, அலட்சியமாக இந்தியாவை வென்றது.

இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின். டெஸ்டில் 51, ஒருநாள் போட்டிகளில் 48 என 99 சதங்கள் அடித்திருந்த இவர், ஒரு வழியாக வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில், தட்டுத்தடுமாறி 100வது சதம் அடித்தார். கடைசியாக மார்ச், 2011ல் சதம் அடித்த பின், 100வது சதம் அடிக்க, சச்சினுக்கு 34 இன்னிங்ஸ் தேவைப்பட்டுள்ளது.

"ஆமை' தோற்றது:

துவக்கத்தில் வேகமாக விளையாடிய சச்சின், 63 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். பின் வேகத்தை குறைத்தார். 80 ரன்களை எட்டிய போது 102 பந்துகளை எதிர் கொண்டிருந்த இவருக்கு, அடுத்த 10 ரன்களை எடுக்க 22 பந்துகள் தேவைப்பட்டது. ஒருவழியாக 100வது சதம் அடித்த போது, 138 பந்துகளை சந்தித்து இருந்தார்.

147 பந்துகளில்...

வங்கதேசம் போன்ற பலம் குன்றிய பவுலர்களுக்கு எதிராக, 147 பந்துகளில் 114 ரன்கள் தான் எடுத்தார். "ஸ்டிரைக் ரேட்' 77.55. இப்படி, அதிக பந்துகளை "விழுங்கியதால்' அடுத்த வந்த தோனி உள்ளிட்ட பேட்ஸ்மேன்களுக்கு ஓவர்கள் இல்லாமல் போனது. இதே சச்சின் தான், 2010ல் குவாலியர் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக 147 வது பந்தில் 200 ரன்கள் எடுத்தார்.

ரசிகர்கள் வெறுப்பு:

நூறாவது சதத்துக்காக அதிக பந்துகளை வீணடித்ததால், வங்கதேசம் அணிக்கு எதிராக, இந்தியா 300 ரன்களை எட்ட முடியாமல் போனது. வங்கதேசத்தின் நாசிர் (ஸ்டிரைக் ரேட், 93.10), சாகிப் (158.06), முஷ்பிகுர் (184) ஆகியோர் குறைந்த பந்துகளில் விரைவாக ரன்கள் எடுத்து, இந்திய அணியை அலட்சியமாக வீழ்த்த, ரசிகர்கள் உச்சக்கட்ட வெறுப்பில் உள்ளனர்.

"சீனியர்' வீரர்கள் பீல்டிங்கில் சொதப்புவதால், 20 ரன்கள் எதிரணிக்கு அதிகமாக செல்கிறது என, தோனி வெளிப்படையாகவே கூறியிருந்தார். அப்படி இருந்தும் இன்னும், நாட்டுக்காக விளையாடுவேன் என்ற பெயரில், சொந்த சாதனைகளை இலக்காக வைத்து களமிறங்கக் கூடாது.

சிக்கலான நிலை:

இன்று இந்திய அணி, பாகிஸ்தானை கட்டாயம் வெல்ல வேண்டும். இல்லை யென்றால், 20ம் தேதி இலங்கை வென்றால் தான், நமது பைனல் வாய்ப்பு குறித்து யோசிக்க முடியும்.

இப்படி ஒவ்வொரு தொடரிலும், அடுத்த அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து தான், நமது பைனல் வாய்ப்பு வருகிறது. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பேன் என்றால், சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், சச்சின் நாட்டுக்காகவும் கொஞ்சம் விளையாட வேண்டும் என்பதே பெரும்பான்மையான ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

1 comments: