ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து சேவக் நீக்கப்பட்டார். சச்சின் மீண்டும் வாய்ப்பு பெற்றார். "ஆல்-ரவுண்டர்' யூசுப் பதான் அணிக்கு திரும்பினார்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை , வங்கதேசம் ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கும் 11வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் மார்ச் 11 முதல் 22 வரை வங்கதேசத்தில் நடக்கிறது. இதில் "நடப்பு சாம்பியன்' இந்திய அணி, முதல் போட்டியில் இலங்கையை (மார்ச் 13) சந்திக்கிறது.
கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளாக கருதப்படும், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மார்ச் 18ல் நடக்கும் லீக் போட்டியில் மோதுகின்றன. இதற்கான இந்திய அணித் தேர்வு நேற்று மும்பையில் நடந்தது. தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்ற கூட்டத்தின் முடிவில் ஆசிய கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது.
சேவக் ஓய்வா:
தோனி கேப்டனாக தொடர்கிறார். ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு தொடரில், 5 போட்டிகளில் 65 ரன்கள் எடுத்த (10, 20, 0, 5, 30) துவக்க வீரர் சேவக்கிற்கு, ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு தரப்பட்டது.
சச்சின் ஓ.கே.,:
இதேபோல, இத்தொடரின் 7 போட்டிகளில், 143 ரன்கள் (2, 48, 15, 3, 22, 14, 39) எடுத்துள்ள சச்சின், ஆசிய அணியில் இடம் பெற்றுள்ளார். இது இவரது 100வது சதம் அடிக்கும் முயற்சியில் உதவியாக இருக்கும் என்று தெரிகிறது. "மிடில் ஆர்டரில்' வழக்கம் போல ரெய்னா, ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா தங்களது இடத்தை பிடித்துக் கொண்டனர். ஆஸ்திரேலியா சென்ற அணியில் இடம் பெற்று, ஒரு போட்டியில் கூட பங்கேற்காத மனோஜ் திவாரிக்கும் வாய்ப்பு தொடர்கிறது.
ஜாகிர் இல்லை:
வேகப்பந்து வீச்சாளர்கள் ஜாகிர் கான், உமேஷ் யாதவ் இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது. இவர்களுக்குப் பதில் கடந்த ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்ற அசோக் டின்டா இடம் பெற்றார். விஜய் ஹசாரே டிராபி தொடரில், சவுராஷ்டிரா அணிக்கு எதிராக 78 பந்துகளில் 114 ரன்கள் எடுத்த "ஆல் ரவுண்டர்'.
சகோதரர்கள் வாய்ப்பு:
யூசுப் பதானுக்கு, நீண்ட இடைவெளிக்குப் பின் இடம் கிடைத்துள்ளது. இவரது சகோதரர் இர்பான் பதான், பிரவீண் குமார், வினய் குமாரும் நீடிக்கின்றனர்.
ஹர்பஜன் "மிஸ்'
சுழற்பந்து வீச்சில் அஷ்வின், ராகுல் சர்மா மீண்டும் தேர்வு செய்யப்பட்டனார். இதனால், "சீனியர்' ஹர்பஜன் சிங் அணிக்கு திரும்புவது மீண்டும் சிக்கலாகி உள்ளது.
அணி விவரம்:
தோனி (கேப்டன், விக்., கீப்பர்), விராத் கோஹ்லி (துணைக் கேப்டன்), சச்சின், காம்பிர், ரோகித் சர்மா, ரெய்னா, மனோஜ் திவாரி, ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், பிரவீண் குமார், வினய் குமார், ராகுல் சர்மா, யூசுப் பதான், அசோக் டின்டா, இர்பான் பதான்.
"வாயை மூடுங்க': ஸ்ரீகாந்த் ஆவேசம்
இந்திய அணியில் இருந்து சேவக் நீக்கப்பட்டது குறித்து பத்திரிகையாளர்கள் திரும்ப, திரும்ப கேட்டபோது, ஆவேசம் அடைந்த தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,"" பாஸ், வாயை மூடுங்க! போதும், அப்படியெல்லாம் பேசக்கூடாது.
அமைதியா இருங்க. ஒரே கேள்வியை திரும்ப, திரும்ப பல வழிகளில் கேட்டாலும், பல பதில்கள் வராது. இந்திய அணியில் இருந்து யாரையும் நீக்கவில்லை. சேவக், ஜாகிர் கான் குறித்து, "பிசியோதெரபிஸ்ட்' அளித்த அறிக்கையின் படி தான் ஓய்வு தரப்பட்டுள்ளது. "பார்ம்' இல்லாத காரணத்தால் நீக்கவில்லை.
இது முற்றிலும் உண்மை. வேறெந்த காரணமும் சொல்ல முடியாது. இதற்காக அவர்களது மருத்துவ அறிக்கையை உங்களிடம் காண்பிக்க முடியாது. ஏனெனில்,இது தேர்வுக்குழுவின் உள்விவகாரம்,''என்றார்.
0 comments:
Post a Comment