ஐ.சி.சி., ஒருநாள் போட்டி வீரர்களுக்கான ரேங்கிங்கில், இந்திய கேப்டன் தோனி, சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் ஆகியோர் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியல் நேற்று துபாயில் வெளியிடப்பட்டது.
இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்திய கேப்டன் தோனி ஒரு இடம் முன்னேறி, நான்காவது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் விராத் கோஹ்லி, மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.
முதலிரண்டு இடங்களில் தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, டிவிலியர்ஸ் ஆகியோர் உள்ளனர். மற்ற இந்திய பேட்ஸ்மேன்களான காம்பிர் (17வது இடம்), சேவக் (25வது), சச்சின் (27வது), ரெய்னா (32வது) ஆகியோர் "டாப்-50' வரிசையில் உள்ளனர்.
அஷ்வின் முன்னேற்றம்:
பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், நான்கு இடங்கள் முன்னேறி, முதன்முறையாக 6வது இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் முடிந்த ஆசிய கோப்பை தொடரில் மூன்று போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தியதே இம்முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம்.
"டாப்-3' வரிசையில் தென் ஆப்ரிக்காவின் டசாட்சொபே, பாகிஸ்தானின் சயீத் அஜ்மல், தென் ஆப்ரிக்காவின் மோர்னே மார்கல் ஆகியோர் உள்ளனர்.
மற்ற இந்திய பவுலர்களான ரவிந்திர ஜடேஜா (29வது இடம்), ஹர்பஜன் (32), ஜாகிர் கான் (34), பிரவீண் குமார் (35), முனாப் படேல் (49), வினய் குமார் (50) ஆகியோர் "டாப்-50' வரிசையில் இடம் பிடித்துள்ளனர்.
சாகிப் முதலிடம்:
"ஆல்-ரவுண்டர்'களுக்கான ரேங்கிங்கில், வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் வாட்சன், பாகிஸ்தானின் முகமது ஹபீஸ், அப்ரிதி, தென் ஆப்ரிக்காவின் காலிஸ் ஆகியோர் "டாப்-5' வரிசையில் உள்ளனர்.
இந்தியா "நம்பர்-3':
அணிகளுக்கான ரேங்கிங்கில், இந்திய அணி 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரை சமன் செய்த ஆஸ்திரேலிய அணி, நான்கு ரேங்கிங் புள்ளிகள் குறைந்து 123 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது.
தென் ஆப்ரிக்க அணி 118 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. ஆசிய கோப்பை தொடரில் மூன்று லீக் போட்டியிலும் தோல்வி கண்ட இலங்கை அணி, ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இங்கிலாந்து அணி நான்காவது இடத்துக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி, 6வது இடத்தில் நீடிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 7வது இடத்தை நியூசிலாந்துடன் பகிர்ந்து கொண்டது.
0 comments:
Post a Comment