சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் டிராவிட்டின் "பேட்டிங் திறனை கிரிக்கெட் பிரபலங்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட்டில் 16 ஆண்டுகளாக அசைக்க முடியாத பேட்ஸ்மேனாக இருந்தார் டிராவிட். அணியின் "பெருஞ்சுவர் என போற்றப்பட்ட இவர், நேற்று முன் தினம் ஓய்வை அறிவித்தார். சக வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களின் அன்பை பெற்றவர் டிராவிட்.
கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை எவ்வித சர்ச்சையிலும் சிக்காத இவர், "ஜென்டில்மேன் வீரராக தன்னை அடையாளம் காட்டினார். இவர் ஓய்வு பெற்றாலும், இவரது சாதனைகள் என்றென்றும் நிலைத்து நிற்கும் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.
இதே போல கெய்ல் உள்ளிட்ட வெளிநாட்டு நட்சத்திரங்களும் வாழ்த்தியுள்ளனர். இவரது ஆட்டத்திறனை பாராட்டிய கிரிக்கெட் பிரபலங்களின் கருத்து...
கிரிக்கெட் களத்தில் டிராவிட் ஒரு "ஹீரோ. உண்மையான விளையாட்டு வீரர். ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேனுக்கு பிறகு அன்னிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டவர். விளையாடும் "ஸ்டைல், மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தில் டிராவிட் ஒரு சாம்பியன்.
-கபில் தேவ்
அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடியவர். நிலைமைக்கு ஏற்ப விவேகமாக "பேட் செய்வார். இளம் வீரர்களுக்கு சிறந்த "ரோல் மாடல். "பேட்டிங் நுணுக்கத்தில் இவருக்கு நிகரான வீரரை கண்டறிவது கடினம்.
-கவாஸ்கர்
குறை காண முடியாத சிறந்த வீரர் டிராவிட். இவரை போன்ற இன்னொரு வீரர் ஒரே இரவில் உருவாக வாய்ப்பு இல்லை. இதற்கு நீண்ட காலம் தேவைப்படும். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே டிராவிட்டாக முடியும்.
-கங்குலி
கிரிக்கெட்டை எப்படி விளையாட வேண்டும் என்று எங்களுக்கும் எல்லாம் கற்றுத் தந்தார். ரஞ்சி, டெஸ்ட் என எந்தப் போட்டியாக இருந்தாலும் முழு அளவில் தயாராக இருப்பார். போட்டிகளில் அவர் செலுத்திய கவனம் பிரம்மிப்பை ஏற்படுத்தும். இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரும் ஜாம்பவனாக டிராவிட்டை குறிப்பிடலாம்.
-ஹர்பஜன்
உலகில் ஒரு டிராவிட் தான் இருக்க முடியும். "டிரஸ்சிங் ரூமிலும், களத்திலும் இனி அவரை சந்திக்க முடியாது. மணிக்கணக்கில் களத்தில் விளையாடியது, சதம் அடித்த "பார்ட்னர்ஷிப் குறித்த, இனிமையான கிரிக்கெட் நினைவுகளை அவருடன் பகிர்ந்து கொண்டேன். 164 டெஸ்டில் பங்கேற்று, 13 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் எடுத்த ஒருவருக்கு, எவ்வித பாராட்டும் போதுமானதாக இருக்காது.
-சச்சின்
டிராவிட்டுடன் சேர்ந்து விளையாடியதை மிகப் பெரும் கவுரவமாக கருதுகிறேன். இந்திய அணிக்கு இவரது பங்களிப்பு மகத்தானது. இளம் வீரர்களுக்கு குருவாக இருந்தார். இவரது ஓய்வு அணிக்கு இழப்பு தான்.
-கும்ளே
கிரிக்கெட் குறித்த ஞானம் டிராவிட்டுக்கு அதிகம். ஆட்ட நுணுக்கங்களை முழுமையாக தெரிந்து வைத்திருந்தார். இனி, களத்தில் இவரை "மிஸ் பண்ண வேண்டியிருக்கும்.
-லட்சுமண்
இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட நீடித்திருக்கலாம். இவரது கிரிக்கெட் திறமை குறையவில்லை. நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறார். ஆஸ்திரேலிய தொடரில் இவர் மட்டுல்ல, மற்ற வீரர்களும் சோபிக்கவில்லை.
-ஜி.ஆர்.விஸ்வநாத்
என்னை பொறுத்தவரை, நெருக்கடியான தருணத்தில் அணியை மீட்கக் கூடிய ஒரே வீரராக டிராவிட் திகழ்ந்தார். எதிரணியை சமாளித்து அணியை கரை சேர்ப்பதில் வல்லவர்.
-ஸ்ரீநாத்
சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல சிறந்த மனிதரும் கூட. அனைத்து விதமான சூழ்நிலைகளிலும் சிறப்பாக விளையாடக் கூடிய மகத்தான வீரர். தனிப்பட்ட முறையில் பார்த்தால், நான் பணியாற்றியவர்களில் டிராவிட் தான் சிறந்தவர்.
-ஜான் ரைட்(முன்னாள் இந்திய பயிற்சியாளர்)
கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்டிருந்தார். அவரது ரத்தத்திலும் இதயத்தில் கிரிக்கெட் கலந்து இருந்தது. பழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதர்.
-வாட்சன்(ஆஸி., வீரர்)
தன்னலமற்ற கிரிக்கெட் வீரர். உதவி மனப்பான்மை கொண்டவர். யாருக்கும் இல்லை என்று சொல்லாதவர். அனைத்து நேரங்களி<லும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்.
-பாபு நட்கர்னி
துணிச்சலான முடிவை எடுத்துள்ளார். இனியும் கிரிக்கெட் விளையாட முடியாது என்ற மனநிலையை எட்டியிருக்கிறார். இளம் வீரர்களுக்கு வழிவிட்டு விலகியுள்ளார். இதன் மூலம் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்கிறார்.
-அன்ஷுமன் கெய்க்வாட்
இளம் வீரராக அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவருடன் பேசியது, பந்துவீசியது, "டிரஸ்சிங் ரூமை பகிர்ந்து கொண்டது போன்றவை சிறந்த அனுபவங்கள். இன்னொரு டிராவிட் உருவாக வாய்ப்பில்லை.
-பிரக்யான் ஓஜா
டிராவிட்டின் மகத்தான கிரிக்கெட் வாழ்க்கை வியப்பை ஏற்படுத்தும். மிகச்சிறந்த மனிதர் மற்றும் கிரிக்கெட் வீரர். இவரை நிறையவே "மிஸ் பண்ணுவோம். வாழத்துக்கள் டிராவிட்.
-யுவராஜ்
மீண்டும் ஒரு முறை சீனப் பெருஞ்சுவரை உருவாக்க முடியாது. இதே போல இன்னொரு டிராவிட் கிடைப்பது அரிது. இவரது ஓய்வால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவது கடினம்.
-அஜித் வடேகர்
கடந்த 20 ஆண்டுகளில் உலகம் மதித்த கிரிக்கெட் வீரர்களில் டிராவிட்டும் ஒருவர்.
-மைக்கேல் வான்(இங்கிலாந்து )
கிரிக்கெட் கண்டெடுத்த சிறந்த வீரர்களுள் டிராவிட்டும் ஒருவர். என்னை கவர்ந்த 5 சிறந்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதலிடம் பெறுகிறார். மற்ற நான்கு பேர் லாரா, சச்சின், பாண்டிங் மற்றும் காலிஸ்.
-அலெக் ஸ்டூவர்ட்(இங்கிலாந்து)
சிலர் விதிப்படி வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். ஆனால், டிராவிட் வெற்றி பெற வேண்டும் என்ற மனஉறுதியால் சாதித்துக் காட்டினார்.
-நவ்ஜோத் சிங் சித்து
கிரிக்கெட் ஜாம்பவனாக திகழ்ந்தார் டிராவிட். இனி இந்த பெருஞ்சுவரை "மிஸ் பண்ணுவோம். மிகச் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை அமையப் பெற்ற இவருக்கு வாழ்த்துக்கள்.
-கிறிஸ் கெய்ல்(வெ.இண்டீஸ்)
சிறந்த பேட்ஸ்மேனாக அடையாளம் காணப்பட்டார். கிரிக்கெட் அரங்கில் இவர் சாதித்ததை நினைத்து எப்போதும் பெருமைப்படலாம்.
-ஷான் போலக்(தென் ஆப்ரிக்கா)
எனது "ஹீரோ டிராவிட் விடைபெற்ற போது, மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. இனிமையான நினைவுகளை தந்ததற்கு நன்றி. கிரிக்கெட் ஜாம்பவானான இவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
-ஆகாஷ் சோப்ரா