சிட்னியில் நூறாவது டெஸ்ட்: இந்திய அணிக்கு மீண்டும் சோதனை

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடக்க உள்ளது. இது இம்மைதானத்தில் நடக்கும் 100வது டெஸ்ட். இந்த ஆடுகளமும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருப்பதால், இந்திய அணிக்கு மீண்டும் சோதனை காத்திருக்கிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, "பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. மெல்போர்னில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் வரும் ஜன., 3ம் தேதி சிட்னியில் துவங்குகிறது. இது இங்கு நடக்கும் 100வது டெஸ்ட் என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது. கடந்த 1882ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் இங்கு நடந்தது.

சிட்னி ஆடுகளம் வழக்கமாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். சமீப காலமாக வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த இரு போட்டிகளிலும் (பாகிஸ்தான், இங்கிலாந்து) முதலில் பேட் செய்யும் அணி சுருண்டதை காண முடிந்தது. இதனால், இந்திய அணிக்கு சிட்னியிலும் சோதனை காத்திருக்கிறது.


இதுகுறித்து ஆடுகள பராமரிப்பாளர் டாம் பார்க்கர் கூறியது:

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளின் போது ஆடுகளம் அமைந்த விதம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் இதேபோன்று தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

இதன் படி முதல் நாளில் வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருக்கும். அடுத்தடுத்து ஆடுகளத்தில் திருப்பம் ஏற்படும். ஏனெனில், இங்குள்ள சூழ்நிலையும் அப்படி உள்ளது.

கடந்த ஆண்டு அதிகமாக மழை குறுக்கிட்டது. இம்முறை புத்தாண்டில் வானிலை மாற்றம் இருக்கும் என்று நம்புகிறேன். இருப்பினும், ஆடுகளத்தை மூடித்தான் வைத்துள்ளோம். ஏனெனில், அடுத்து வரும் நாட்களில் இங்கு அதிக போட்டிகள் நடக்கவுள்ளன.

தவிர, வேகம், சுழற் பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் என அனைவருக்கும் சாதகமான ஆடுகளத்தை தரத்தான் எப்போதும் விரும்புகிறேன். இதற்கு தகுந்து தான் ஆடுகளத்தை தயார் செய்துள்ளோம்.

இவ்வாறு டாம் பார்க்கர் கூறினார்.

0 comments:

Post a Comment