இந்திய அணியின் அடுத்த வாரிசுகள்

இந்திய அணியின் "பிக்-3' என்றழைக்கப்படும் சச்சின், லட்சுமண், டிராவிட் ஆகியோர் விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையில், இந்த இடத்தை நிரப்ப தகுதியான இருவராக ரோகித் சர்மா, விராத் கோஹ்லி உருவெடுத்துள்ளனர்.

இந்திய அணியின் "மிடில் ஆர்டரில்' கங்குலி ஓய்வுக்குப் பின், அந்த இடம் சரியாக நிரப்பப்படாமல் உள்ளது. இந்த இடத்துக்கு பத்ரிநாத், புஜாரா, ரெய்னா, யுவராஜ் என மாறி, மாறி வந்தும் இன்னும் யாரும் நிலைத்த பாடில்லை.

இந்நிலையில் தற்போதைய அணியின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் சச்சின், டிராவிட், லட்சுமண் ஆகிய மூவரும் மிக விரைவில் டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடும் போட்டி:

ஏற்கனவே, "மிடில் ஆர்டரில்' ஒரு இடம் உறுதியில்லாமல் உள்ளது. இந்நிலையில் சச்சின், லட்சுமண், டிராவிட் ஆகியோருக்கு, எதிர்வரும் ஆஸ்திரேலிய தொடர் தான் கடைசியாக இருக்கும் என்ற நிலையில், இந்த மூன்று இடங்களுக்கு கடும் போட்டி உருவாகியுள்ளது.


முந்தும் "இருவர்':

ரோகித் சர்மா, 24, விராத் கோஹ்லி, 25, ஆகியோர் இரு இடங்களைப் பெறுவதில் முன்னணியில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் "டாப்' பார்மில் இருக்கும் இவர்கள், வரும் டிசம்பர் 26ல் துவங்கும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.


கோஹ்லி முன்னிலை:

இதில் ரோகித் சர்மாவை விட, டில்லியின் விராத் கோஹ்லிக்கு விளையாடும் "லெவனில்' இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அரைசதம் அடித்த விராத் கோஹ்லி, இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் சதம் (117) அடித்து அசத்தினார்.

மொத்தம் பங்கேற்ற 72 ஒருநாள் போட்டியில் 9 சதம் அடித்துள்ளார். இதில் கடைசி 9 போட்டியில், 3 முறை சதம் அடித்துள்ளார். இந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில், 900க்கும் அதிகமாக குவித்து, இரண்டாவது இடத்தில் உள்ளார்.


ரோகித் பரிதாபம்:

மறுமுனையில் ரோகித் சர்மாவை துரதிருஷ்டம் துரத்துகிறது. உண்மையை சொன்னால், இவர் கடந்த 2010ல் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாக வேண்டியது. நாக்பூரில் போட்டி துவங்க சில மணி நேரங்கள் இருந்த போது ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக, அணியில் இருந்து வெளியேறினார்.


மீண்டும் காயம்:

கடந்த டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், சந்தித்த முதல் பந்திலேயே விரல் எலும்பு முறிந்து நாடு திரும்பினார். சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட முடியாத நிலையில், இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். தற்போதைய முதல் மூன்று போட்டியில் ரோகித் சர்மா 72, 90*, 95 என ரன்கள் குவித்தார்.


வெங்சர்க்கார் பாராட்டு:

இந்த இருவர் குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு முன்னாள் தலைவர் வெங்சர்க்கார் கூறுகையில்,""சர்வதேச போட்டிகளில் "ஷார்ட் பிட்ச்' பந்துகளை கையாளும் திறன் அதிகம் தேவை.

இவ்விஷயத்தில் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி இருவரும், "சூப்பர்' திறமை பெற்றுள்ளனர். இவர்களுக்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என, அனைத்துவிதமான போட்டிகளிலும் இடம் பெறத் தகுதியுள்ளது,'' என்றார்.

மொத்தத்தில் இந்த இளம் வீரர்களுக்கு பந்துகள் எகிறும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில், கடும் சோதனை காத்திருக்கிறது.

0 comments:

Post a Comment