ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய வீரர்கள் மிகுந்த கவனமுடன் விளையாட வேண்டும்,'' என, முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. முதல் டெஸ்ட், மெல்போர்னில் இன்று ஆரம்பமாகிறது.
இதுகுறித்து அக்ரம் கூறியதாவது:
சச்சின், டிராவிட், லட்சுமண் உள்ளிட்ட அனுபவ வீரர்களுடன் களமிறங்கி உள்ள இந்திய அணி, போதிய அனுபவமில்லாத ஆஸ்திரேலியாவை வீழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் முதலிரண்டு டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர்கள் மிகுந்த கவனமுடன் விளையாட வேண்டும்.
ஏனெனில், எந்த ஒரு அணியாக இருந்தாலும், ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடும் முதலிரண்டு டெஸ்டில் தடுமாற்றத்தை சந்திக்கும். இதனால் தோல்வி அடைய நேரிடும்.
முன்னதாக நான், டெஸ்ட் போட்டியில் விளையாட பத்து முறை ஆஸ்திரேலியா சென்றேன். அப்போது எங்கள் பாகிஸ்தான் அணி, முதலிரண்டு போட்டியில் சரிவை சந்தித்தது. எனவே இந்திய வீரர்கள், எச்சரிக்கையுடன் விளையாடி, முதலில் தோல்வியில் இருந்து மீள வேண்டும்.
இதன்மூலம் மீதமுள்ள போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடரை கைப்பற்றலாம்.
பேட்டிங் வரிசையில் ஆறாவது வீரராக களமிறங்க விராத் கோஹ்லியை தேர்வு செய்யலாம். ஏனெனில் இவர், பயிற்சி போட்டியில் சதம் அடித்திருப்பதால், அங்குள்ள மைதானத்தின் தன்மைக்கேற்ப சிறப்பாக விளையாட வாய்ப்பு உள்ளது. அதேவேளையில், ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் மாற்றம் இல்லை.
இவ்வாறு அக்ரம் கூறினார்.
0 comments:
Post a Comment