ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், "ஹாட் ஸ்பாட்' தொழில் நுட்பத்தை பயன்படுத்த பி.சி.சி.ஐ., மறுப்பு தெரிவித்துள்ளது.
அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறைக்கு ஏற்கனவே இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து போட்டியில் பங்கேற்கும் இரு நாடுகளும் ஒத்துக் கொண்டால் மட்டுமே டி.ஆர்.எஸ்., முறையை அமல்படுத்த முடியும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்தது.
"ஹாட் ஸ்பாட்' எப்படி?
கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், டி.ஆர்.எஸ்., முறையை நிராகரித்த இந்தியா, "ஹாட் ஸ்பாட்' முறையை மட்டும் ஏற்றுக் கொண்டது. இதன் படி, "இன்பிரா ரெட் கேமரா' மூலம் வீரர்களின் அசைவுகள் கறுப்பு வெள்ளை ("நெகடிவ்') படங்களாக பதிவு செய்யப்படும்.
பந்து பேட்டின் மீது பட்டால், அந்த இடத்தில் மட்டும் வெள்ளையாக தெரிவதை வைத்து, "அவுட்' கொடுக்கலாம்.
பாதிப்பு அதிகம்:
ஆனால், இங்கிலாந்து தொடரில், லட்சுமண் பேட்டில், பந்து பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனை "ஹாட் ஸ்பாட்' முறையில் சரியாக உறுதி செய்ய முடியவில்லை. இதே போல டிராவிட்டுக்கும் பலமுறை தவறாக "அவுட்' கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் "ஹாட் ஸ்பாட்' முறை வேண்டாம் என பி.சி.சி.ஐ., முடிவு செய்ததாக தெரிகிறது.
குழப்பமாக உள்ளது:
இதுகுறித்து போட்டியை ஒளிபரப்பும் ஆஸ்திரேலிய சேனலின் அதிகாரி பிராட் மெக்னாமரா கூறுகையில்,""கடந்த முறை ஆஸ்திரேலியா சென்ற போது, இந்திய அணிக்கு எதிராக தீர்ப்புகள் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் டி.ஆர்.எஸ்., மற்றும் "ஹாட் ஸ்பாட்' தொழில் நுட்பம் வேண்டாம் என கூறியுள்ளது வியப்பாக இருக்கிறது. இத்தொடரில், இந்திய அணி சில பாதகமான தீர்ப்புகளை பெற்றால், டி.ஆர்.எஸ்., வேண்டும் என்று கூறத் துவங்கிவிடுவர்.
அம்பயர்கள் தவறு செய்தார்களா என்பதை அறிந்து கொள்ள, ரசிகர்களுக்காக மட்டும் "ஹாட் ஸ்பாட்' மூலம் சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் காண்பிக்கப்படும்,''என்றார்.
0 comments:
Post a Comment