இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கக் கிடைத்துள்ள வாய்ப்பு என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் ஆட்டம், ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முன்னணி வீரர்கள் சச்சின், சேவாக், யுவராஜ், கம்பீர் ஆகியோர் பங்கேற்கவில்லை.

ஒருநாள் போட்டியில் தோனி விளையாடாததால் ரெய்னா கேப்டனாகியுள்ளார். முன்னணி வீரர்கள் அணியில் இடம் பெறாததால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்து ஜாகீர் கான் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியது:

தங்கள் திறமையை நிரூபித்து இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க இளம் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் மூலமும் சிறந்த வீரர்கள் பலரை அடையாளம் காண முடிந்துள்ளது. உலக சாம்பியன் என்ற பட்டம் பெற்றுள்ள இந்திய அணிக்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் மிகுந்த எதிர்பார்ப்பு உடையதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தோனி மிகச்சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. உலகக் கோப்பை, ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக் என அவரது தலைமையிலான அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறது. அவரது ஆட்டமும் சிறப்பாக உள்ளது. இத்தனை வெற்றிகளுக்குச் சொந்தக்காரரான அவர், எப்போதும் எளிமையாகவும், அமைதியாகவும் இருப்பார். இதுவே அவரது வெற்றியின் ரகசியம் என்று கூடக் கூறலாம் என்றார் ஜாகீர் கான்.


தமிழக வீரர்கள் முகுந்த், பத்ரிநாத், முரளி விஜய் ஆகியோருக்கு மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதேபோல டெஸ்ட் அணியில் இளம் வீரர்கள் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

0 comments:

Post a Comment