சச்சின் தந்த மிகப் பெரிய விருது

எனது பேட்டிங்கை சச்சின் பாராட்டிய அந்த தருணத்தை மறக்க முடியாது. இதுவே எனக்கு கிடைத்த மிகப் பெரிய விருது,''என, இளம் வீரர் வல்தாட்டி கூறியுள்ளார்.
நான்காவது ஐ.பி.எல்., தொடர் இந்திய மண்ணில் நடக்கிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பிடித்துள்ள இளம் இந்திய வீரர் வல்தாட்டி (27 வயது) அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 63 பந்தில் 120 ரன்கள் (2 சிக்சர், 19 பவுண்டரி) எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதுவரை இவர், 13 போட்டிகளில் பங்கேற்று ஒரு சதம், இரண்டு அரைசதம் உட்பட 458 ரன்கள் எடுத்துள்ளார். பவுலிங்கிலும் அசத்தி வரும் இவர், இதுவரை 6 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
தனது ஆட்டம் குறித்து வல்தாட்டி கூறியதாவது:
ஐ.பி.எல்., தொடரில் பேட்டிங், பவுலிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இம்முறை பெங்களூரு அணியின் கிறிஸ் கெய்ல் அல்லது மும்பை அணியின் லசித் மலிங்காவுக்கு தொடர் நாயகன் விருது கிடைக்கலாம் என எதிர்பார்க்கிறேன்.
சமீபத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது, இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், என்னை வெகுவாக பாராட்டினார். "நீ நன்றாக பேட்டிங் செய்கிறாய், தொடர்ந்து சிறப்பாக செயல்படு' என வாழ்த்தினார். சச்சினிடம் இருந்து கிடைத்த இந்த பாராட்டை எனது வாழ்நாளின் மிகப் பெரும் விருதாக கருதுகிறேன். இந்த தருணத்தை என்றும் மறக்க மாட்டேன். இதனை எனது மிகச்சிறந்த சாதனையாக நினைக்கிறேன். சச்சின் மற்றும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மாத்யூ ஹைடனை எனது "ரோல் மாடலாக' கருதுகிறேன்.
முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ், எந்த ஒரு பவுலரையும் விட்டுவைக்கமாட்டார். இதேபோல தற்போது இந்தியாவின் அதிரடி துவக்க வீரர் சேவக், எந்த ஒரு எதிரணி பவுலரை கண்டு அஞ்சுவது கிடையாது. சேவக் பேட்டிங்கை தொடர்ந்து பார்த்து வருகிறேன். ஆனால் அவரை போல ரன் சேர்க்க முயற்சிக்கபோவதில்லை. இது மிகவும் கடினம். அது சேவக்கின் தனி "ஸ்டைல்'. எனக்கென்று ஒரு தனி "ஸ்டைலை' உருவாக்க திட்டமிட்டுள்ளேன்.
ஐ.பி.எல்., தொடர், என்னைப்போன்ற இளம் வீரர்களுக்கு திறமையை நிரூபிக்கும் சிறந்த மேடையாக விளங்குகிறது. எங்கள் அணி கேப்டன் கில்கிறிஸ்ட், இளம் வீரர்களுக்கு சிறந்த முன் உதாரணமாக திகழ்கிறார். எனது இளமை பருவம் முதல், அவரது பேட்டிங்கை கண்டு வருகிறேன். தற்போதும் அதேவேகத்துடன் ரன் சேர்த்து வருவது அவரது சிறப்பம்சம். அவருடன் இணைந்து துவக்க வீரராக களமிறங்குவதில் பெருமை படுகிறேன். போட்டியின் போது நிறைய ஆலோசனை வழங்குவார். இவரது ஆலோசனைகள் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவுகிறது.
இந்திய அணிக்காக விளையாடுவதை லட்சியமாக கொண்டுள்ளேன். இதற்காக ஐ.பி.எல்., உள்ளிட்ட தொடர்களில் எனது திறமையை நிரூபிக்க திட்டமிட்டுள்ளேன். விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு வல்தாட்டி கூறினார்.

0 comments:

Post a Comment