வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் மற்றும் "டுவென்டி-20 தொடருக்கு சுரேஷ் ரெய்னா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக காம்பிர், யுவராஜ் சிங் நீக்கப்பட்டனர். டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது.
அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி, ஒரே ஒரு "டுவென்டி-20, ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
காம்பிர் கேப்டன்:
"டுவென்டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் சச்சின், தோனி, ஜாகிர் கான் உள்ளிட்டோருக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது. சேவக் மற்றும் ஆஷிஸ் நெஹ்ரா காயம் காரணமாக விலகினர். இதனால் துவக்க வீரர் கவுதம் காம்பிர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ரெய்னா கேப்டன்:
ஆனால் காம்பிருக்கு சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., போட்டியின் போது தோள்பட்டை பகுதியில்
காயம் ஏற்பட்டதால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவரை தொடர்ந்து நுரையீரல் பகுதியில் ஏற்பட்டுள்ள நோய்த் தொற்றால், யுவராஜ் சிங்கும் விலகுவதாக தெரிவித்தார்.
இதனால் "டுவென்டி-20 மற்றும் ஒருநாள் தொடரின் புதிய கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டார். சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
திவாரி வாய்ப்பு:
காம்பிர், யுவராஜ் சிங்கிற்கு பதிலாக ஷிகர் தவான், மனோஜ் திவாரி உள்ளிட்ட இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் முன்னதாக தலா ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். சர்வதேச "டுவென்டி-20 போட்டிகளில் விளையாட இருப்பது இவர்களுக்கு இதுவே முதன்முறை.
அபினவ் முகுந்த்அறிமுகம்:
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி, நேற்று சென்னையில் தேர்வு செய்யப்பட்டது. இதில் ஒருநாள் தொடருக்கு விருப்ப ஓய்வை பெற்ற இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கவில்லை.
தமிழக வீரர் அபினவ் முகுந்த் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார். இதேபோல விராத் கோஹ்லி, முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். டெஸ்ட் தொடரின் கேப்டனாக தோனி நீடிக்கிறார். துணைக் கேப்டன் பொறுப்பு லட்சுமணுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர சீனியர் வீரர் ராகுல் டிராவிட், ஜாகிர் கான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
------
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
தோனி (கேப்டன்), லட்சுமண் (துணைக் கேப்டன்), டிராவிட், முரளி விஜய், அபினவ் முகுந்த், விராத் கோஹ்லி, பத்ரிநாத், ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, ஜாகிர் கான், ஸ்ரீசாந்த், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, முனாப் படேல், சுரேஷ் ரெய்னா, பார்த்திவ் படேல்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:
16 பேர் கொண்ட இந்திய அணி:
சுரேஷ் ரெய்னா (கேப்டன்), ஹர்பஜன் சிங் (துணைக் கேப்டன்), பார்த்திவ் படேல், விராத் கோஹ்லி, மனோஜ் திவாரி, ஷிகர் தவான், பத்ரிநாத், ரோகித் சர்மா, அஷ்வின், பிரவீண் குமார், இஷாந்த் சர்மா, முனாப் படேல், வினய் குமார், யூசுப் பதான், அமித் மிஸ்ரா, சகா.
---
என்ன பிரச்னை?
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான் இந்திய அணியில் முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை. இவர்களது பிரச்னை பற்றி பார்ப்போம்.
வீரர் காரணம்
சேவக் தோள் பட்டை காயம்
காம்பிர் தோள் பட்டை காயம்
யுவராஜ் நுரையீரல் நோய்த் தொற்று
நெஹ்ரா கைவிரலில் காயம்
சச்சின் விருப்ப ஓய்வு
தோனி விருப்ப ஓய்வு
ஜாகிர் விருப்ப ஓய்வு
---
தமிழக வீரர் முகுந்த்?
டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக இடம் பெற்றுள்ள தமிழக வீரர் அபினவ் முகுந்த், கடந்த 1990ல் சென்னையில் பிறந்தவர். உள்ளூரில் அசத்திய இவர், இந்த சீசனில் 12 முதல் தர போட்டிகளில் 5 சதங்கள் உட்பட 1211 ரன்கள் எடுத்துள்ளார். இதன் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பு தேடி வந்துள்ளது.
0 comments:
Post a Comment