ஐ.பி.எல்., லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கு புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்பு உள்ளதால், கடும் போராட்டம் காத்திருக்கிறது.
இந்தியாவில் நடக்கும் நான்காவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் முடிகின்றன. இதில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று மாலை நடக்கும் 69வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
யாருக்கு முதலிடம்:
இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில், சென்னை அணி 9 வெற்றியுடன் 18 புள்ளிகள் பெற்று, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 13 போட்டிகளில் 17 புள்ளிகளுடன் உள்ளது. இன்று வெற்றி பெறும் அணிக்கு புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
பேட்டிங் ஆறுதல்:
சென்னை அணிக்கு துவக்க வீரர் முரளி விஜய் தொடர்ந்து நிச்சயமற்ற முறையில் பேட்டிங் திறனை வெளிப்படுத்துகிறார். இவரது ஜோடியான மைக் ஹசி (11 போட்டியில் 400 ரன்கள்), சராசரியாக ரன் குவித்து வருவது நல்ல செய்தி.
"மிடில் ஆர்டரில்' பத்ரிநாத்(362), ரெய்னா (353) ஆகியோர் அதிரடியுடன் ரன் சேர்ப்பது அணிக்கு பலம் தான். கடந்த போட்டியின் ஆட்டநாயகன் சகா, இன்றும் அசத்த முயற்சிக்கலாம். கேப்டன் தோனி தன் பங்கிற்கு உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சராசரி பவுலிங்:
பவுலிங்கை பொறுத்தவரையில் இதுவரை 15 விக்கெட் வீழ்த்திய போலிஞ்சர், இவரது பங்காளி ஆல்பி மார்கல் (14 விக்.,) இருவரும், சென்னை அணிக்கு கடைசி நேரத்தில் ஆறுதலாக செயல்படுகின்றனர். சுழலில் தமிழகத்தின் அஷ்வினும் (15 விக்.,) இக்கட்டான நேரங்களில் பிரகாசிக்க துவங்கியுள்ளார். தவிர, மீண்டும் துவக்க ஓவர்களை இவர் வீசுவதால், இன்று பெங்களூரு அணியின் கெய்லுக்கு சிக்கல் தான்.
கெய்ல் பலம்:
துவக்கத்தில் தோல்விகளையே சந்தித்து வந்த பெங்களூரு அணி, கெய்ல் வருகைக்குப் பின் இமாலய எழுச்சி கண்டது. தொடர்ச்சியாக ஏழு வெற்றிகளை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்த இந்த அணி, கடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான மோசமான தோல்வியால் சற்று குழப்பத்தில் உள்ளது போலத் தெரிகிறது.
இதைப் பயன்படுத்தி அதிரடி கெய்லை (436 ரன்கள்), விரைவில் அவுட்டாக்கினால் போட்டி, சென்னை அணிக்கு சாதகமாக திரும்பலாம். இருப்பினும், பின் வரிசையில் கேப்டன் விராத் கோஹ்லி (413), சவுரப் திவாரி, டிவிலியர்ஸ், ஆசாத் பதான் மற்றும் முகமது கைப் போன்றவர்கள் கைகொடுப்பார்கள் என்று நம்பப்படுகிறது.
ஜாகிர் ஏமாற்றம்:
உலக கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய ஜாகிர் கான், தற்போதைய ஐ.பி.எல்., தொடரில் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. இதுவரை பங்கேற்ற 11 போட்டியில் 9 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதேநேரம் அரவிந்த் (14 விக்.,) ஆறுதல் இன்றும் தொடரலாம். இவர்களுடன் லாங்கிவெல்ட், அபிமன்யு மிதுனும் சாதிப்பார்களா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வெற்றி முக்கியம்:
இரு அணிகளுக்கும் இன்றைய போட்டியின் வெற்றி மிகவும் முக்கியம். ஆனால், பெங்களூரு அணி சொந்தமண் பலத்தில் விளையாடும் என்பதால், தோனியின் சென்னை கிங்ஸ், வெற்றிக்கு கடுமையாக போராட வேண்டியது இருக்கும்.
சென்னை ஆதிக்கம்
ஐ.பி.எல்., தொடரில் இரு அணிகளும் இதுவரை 8 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 5ல் சென்னை கிங்ஸ் அணியும், 3ல் பெங்களூரு அணியும் வென்றுள்ளன.
* சென்னை அணி கேப்டன் தோனி, இன்று 31 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், "டுவென்டி-20' அரங்கில் 2000 ரன்களை எட்டலாம்.
0 comments:
Post a Comment