இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி சந்தேகமே!

இந்த ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளிடையே கிரிக்கெட் போட்டியை நடத்துவது சந்தேகம்தான் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த ஆண்டில் இரு அணிகளும் சர்வதேச அளவில் ஏராளமான போட்டிகளில் பங்கேற்க இருப்பதால் போட்டியை நடத்தும் வாய்ப்பு குறைவு. இருப்பினும் இரு நாட்டு அரசுகளும் முயற்சி எடுக்கும் பட்சத்தில், பொதுவான இடத்தில் வைத்து போட்டியை நடத்துவதற்கு வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.


ஜாகீர் அப்பாஸ்: இரு நாட்டு அரசுகளும் விரும்பினால் இரு நாடுகளிலும் அல்லாமல், பொதுவான இடத்தில் போட்டியை நடத்துவதற்கு வாய்ப்புள்ளது. இந்திய அரசு அந்நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) கேட்டுக் கொண்டால், கண்டிப்பாக அதற்கான நடவடிக்கையை கிரிக்கெட் வாரியம் எடுக்கும்.


இரு நாடுகளுக்கிடையில் மீண்டும் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டியை நடத்துவது முக்கியமானது. இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை நடத்துவது சர்வதேச கிரிக்கெட்டுக்கும் முக்கியமானது.


இவ்விரு அணிகளுக்கு இடையில் போட்டியை நடத்துவதன் மூலம் இரு நாட்டு கிரிக்கெட் வாரியம், வீரர்கள் ஆகியோருக்கு அதிக அளவில் நிதியும் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.


ஜாவித் மியான்தத்: சர்வதேச கிரிக்கெட் போட்டி அட்டவணையை நான் இன்னும் பார்க்கவில்லை. பாகிஸ்தான் அணிக்கு பெரிய அளவில் போட்டிகள் இருக்காது என்று நினைக்கிறேன். இருப்பினும் இந்திய அணிக்கு நிறைய போட்டிகள் இருக்கும். எனவே அடுத்த ஆண்டில் இவ்விரு அணிகளுக்கு இடையே போட்டியை நடத்த பாகிஸ்தான் வாரியம் இப்போதிலிருந்தே திட்டமிட வேண்டும் என்று
கூறியுள்ளார்.


ரஷீத் லத்திப்: போட்டியை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என்பதை ஆதரிக்க முடியாது. அவ்வாறு நடத்தும்போது அந்தப் போட்டி அதன் அழகையும், முக்கியத்துவத்தையும் இழந்துவிடும். இந்தியா அல்லது பாகிஸ்தானில் நடக்கும்போது அதற்கு கிடைக்கும் முக்கியத்துவமே வித்தியாசமானது. ஏராளமானோர் போட்டியைக் கண்டுகளிக்க வருவர். தேவைப்பட்டால் இந்தியாவிலேயே இந்தப் போட்டியை நடத்தலாம் என்று கூறியுள்ளார்.


2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தினர். இதன்பிறகு இவ்விரு அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டது.


இந்த நிலையில் சமீபத்தில் மொஹாலியில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியை காண பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸô கிலானி வந்து சென்றார். இதன்பிறகு இவ்விரு நாடுகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் போட்டியை தொடங்க பாகிஸ்தான் அரசும், கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்திய அரசும் அதற்கு இசைவு தெரிவித்திருந்தது.


இருப்பினும் இதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது. இதுதொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்தியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டோம் என சமீபத்தில் பிசிசிஐ செயலர் சீனிவாசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment