இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
அதனால் இந்த ஆண்டு இவ்விரு அணிகளுக்கு இடையில் போட்டிகள் நடைபெறக் கூடும் என்று தெரியவந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன்பிறகு பாகிஸ்தானுடன், இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதில்லை என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சந்தித்தன. இந்த ஆட்டத்தைக் காண வருமாறு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸô கிலானிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பை ஏற்று கிலானி மொஹாலி வந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைக் கண்டுகளித்தார்.
இந்த நிலையில் உலகக் கோப்பையில் விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர் கிலானி திங்கள்கிழமை விருந்தளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கிலானி, இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடுவதை விரும்புகிறோம். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் இதில் முடிவு எட்டப்படவில்லை என்றார்.
இதுதொடர்பாக "தி நியூஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுபான் அஹமது கூறியிருப்பது:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) அட்டவணைப்படி தொடர்ந்து போட்டிகள் உள்ளது. ஆனாலும், அதற்கிடையில் இந்த ஆண்டு இவ்விரு அணிகளுக்கு இடையில் மூன்று ஒருநாள் ஆட்டங்களை நடத்த வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறோம்.
இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் இதற்கு முயற்சி செய்யும் பட்சத்தில் இந்த ஆண்டில் விளையாட வாய்ப்புள்ளது. போட்டியை நடத்துவதற்கான பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது என்றார்.
0 comments:
Post a Comment