சச்சின் ஆட்டம் வியப்பளிக்கிறது

வயது கூடிக் கொண்டே சென்றாலும், கடந்த இரு ஆண்டுகளாக சச்சின் சிறப்பாக ஆடி வருவதை நம்பமுடியவில்லை என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்தார்.

லண்டனில் இந்திய பத்திரிகையாளர்களிடம் அவர் இதுகுறித்து வியாழக்கிழமை கூறியது:

வயது கூடிக்கொண்ட சென்றாலும்கூட, சச்சின் சாம்பியனைப் போன்றே விளையாடி வருகிறார். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினருக்கு எனது பாராட்டுகள். இந்திய அணி உலகின் எந்த அணியையையும் வெல்லக்கூடிய திறமைபடைத்த அணி.


இருப்பினும் அவர்கள் முழுத்திறமையை வெளிப்படுத்தி விளையாடுவதில்லை. மற்ற அணிகளை விட இந்திய அணி சிறந்த அணி என்பதில் சந்தேகமில்லை என்றார்.


இந்திய அணியின் வெற்றிக்கான ரகசியம் குறித்து பேசிய கபில்தேவ், காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, உலகக் கோப்பை என பார்க்கும்போது நிச்சயம் ஒவ்வொரு விளையாடிலும் இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது. இப்போது இந்திய அணி உலகின் நம்பர் ஒன் அணியாக உள்ளது. வீரர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தும் போது நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்கள் என்றார்.


உலகக் கோப்பை இறுதி ஆட்டம் குறித்துப் பேசிய கபில்தேவ், பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தது. தோனி தேவையான நேரத்தில் சிறப்பாக ஆடினார். வீரேந்திர சேவாக் மிக அபாயகரமான வீரர். அவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர். ஆட்டத்தை எளிதாக எதிர்கொள்ளக்கூடியவர் என்றார்.


இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து கவலை தெரிவித்த கபில், 1983-ல் கோப்பையை வென்ற அணியைவிட இப்போதைய அணியே சிறந்த அணி. அப்போதைய வீரர்கள் நிறைய ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள். இப்போதைய வீரர்கள் மிகுந்த அனுபவமுள்ளவர்கள். அதனால் இப்போதைய அணி சிறந்த அணி என்றார்.


ஐபிஎல் குறித்துப் பேசிய கபில், ஐபிஎல் போட்டியால் எல்லா வீரர்களும் பயனடைந்துள்ளனர். அதில் சாதகத்தைப் போன்று பாதகமும் உள்ளது. தொடர்ந்து விளையாடுவதால் வீரர்களுக்கு ஓய்வு கிடைப்பதில்லை.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரஞ்சி வீரர்களுக்கும், இளம் வீரர்களுக்கும் பணம் வழங்க வேண்டும்.


விளையாட்டை வளர்க்க வேண்டுமென்றால் பள்ளிகள் அளவிலேயே அதற்கான பணிகளை
மேற்கொள்ள வேண்டும். வீரர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் 10 சச்சின்களையோ, தோனிகளையோ உருவாக்க முடியும்.


எங்கள் காலத்தில் கிரிக்கெட்டில் காவஸ்கர்தான் கடவுள் போன்றவர். இப்போது சச்சின் கடவுள் போன்றவர். இனிமேல் அவரைப் போன்று ஒரு வீரர் கிடைக்காவிட்டால் அது வருத்தத்துக்குரியது என்றார்.


கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கப்படுவது குறித்துகேட்டபோது, சட்டம் என்பது அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஒன்றுதான். எனவே எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

0 comments:

Post a Comment