பைனலுக்கு செல்வது எப்படி?

நான்காவது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் இடம் பெற்றுள்ள 10 அணிகளும், தலா 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன. இதன் பின் அரையிறுதி போட்டியில் பங்கேற்காமல், பைனலுக்கு செல்வது எப்படி என்ற விபரத்தை இங்கே காணலாம்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 2010 தொடரில் இருந்த 8 அணிகளின் எண்ணிக்கையுடன் கூடுதலாக, இரண்டு அணிகள் இம்முறை பங்கேற்கின்றன. இதன்படி கொச்சி மற்றும் புனே அணிகளை சேர்த்து, மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

இந்த அணிகள் அனைத்தும், மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும் பட்சத்தில், போட்டிகளின் எண்ணிக்கை 94 ஆக உயரும். இதைக்குறைப்பதற்காக, இம்முறை 10 அணிகளும், "ஏ', "பி' என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள், ஒன்றுக்கொன்று இரண்டு முறை மோதும்.

தவிர, ஏற்கனவே தேர்வு செய்ததன் அடிப்படையில், அடுத்த பிரிவில் உள்ள ஏதாவது ஒரு அணியுடன் இரண்டு போட்டியும், மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு போட்டியிலும் பங்கேற்கும்.

இதனால், கடந்த முறை போலவே, ஒரு அணி மொத்தம் 14 போட்டிகளில் பங்கேற்கும். இதில் வழக்கம் போல் ஒவ்வொரு அணியும் சொந்த ஊரில் 7 போட்டிகளிலும்,வெளியூரில் 7 போட்டிகளிலும் விளையாட உள்ளன. மொத்தம் 74 போட்டிகள் நடக்கும்.


சென்னை போட்டி:

உதாரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொச்சி, புனே வாரியர்ஸ், கோல்கட்டா, பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய 5 அணிகளுக்கு எதிராக உள்ளூரிலும், வெளியூரில் தலா 2 போட்டிகளில் விளையாடும். தவிர, டில்லி, டெக்கான் அணிகளுடன் உள்ளூரிலும், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக வெளியூரிலும் தலா ஒரு போட்டியில் விளையாட உள்ளது.


"பிளே ஆப்':

லீக் போட்டிகள் முடிந்தவுடன், கடந்த முறை போன்று அரையிறுதி போட்டிகள் இம்முறை கிடையாது. ஏனெனில் 10 அணிகளில் முதலிடம் பெற்றும், அரையிறுதியில் தோற்கும் பட்சத்தில் தொடரில் இருந்து வெளியேற நேரிடும். இதை தவிர்ப்பதற்காக இம்முறை "பிளே ஆப்' முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


பைனல் எப்படி?

இதன்படி, மொத்தமுள்ள 10 அணிகளில் "டாப்-4' இடம் பெறும் அணிகள், இந்த சுற்றில் பங்கேற்கும். இதன் விபரம்:

* முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள், மோதும் போட்டியில் (மே 24) வெற்றி பெறும் அணி, நேரடியாக பைனலுக்கு முன்னேறும்.

* மூன்று, நான்காவது இடத்தை பெறும், அணிகள் மோதும் போட்டியில் வெல்லும் அணி, முந்தைய போட்டியில் (மே 24) தோல்வியடைந்த அணியுடன் மோத வேண்டும்.

* இதில் வெற்றி பெறும் அணி, முதலில் பைனலுக்கு முன்னேறிய அணியுடன், வரும் மே 28ம் தேதி சென்னையில் நடக்கும் பைனலில் மோதும்.

0 comments:

Post a Comment