கிரிக்கெட் மைதானத்தில் தற்கொலை படை தாக்குதல்

ஆப்கனில் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் மரணம் அடைந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ஆப்கனின் தென் கிழக்குப் பகுதியில் உள்ளது பக்டிக்கா பகுதி. பாகிஸ்தானின் எல்லைப்புற பகுதியான இங்கு உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்தது. அப்போது வெடி குண்டு நிரப்பப்பட்ட கார் ஒன்று வேகமாக வந்து பார்வையாளர்கள் இருந்த பகுதியின் மீது மோதியது.

இந்த தற்கொலை படை தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என. தலிபான் அமைப்பினர் மறுத்தனர். 

முதலில் கால்பந்து மைதானத்தில் தாக்குதல் நடந்ததாக செய்திகள் வெளியாகின. பின் தான் கிரிக்கெட் மைதானம் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து ஆப்கன் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,‘ கிரிக்கெட் போட்டியை பார்வையிட வந்த உள்ளூர் அரசு நிர்வாகிகளை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம்,’ என, தெரிவித்தது. 

இரண்டாவது முறை:

கடந்த 2001ல் ஆப்கனில் அமெரிக்கா உட்பட பல்வேறு வெளிநாட்டு படைகள் இணைந்து தலிபான் ஆட்சியை அகற்றின. கடந்த ஆண்டு இப்படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

இதன் பின் ஆப்கன் அரசு தங்களிடம் உள்ள சிறிய அளவிலான பாதுகாப்பு வீரர்களை கொண்டு, தலிபான் பயங்கரவாத அமைப்பை எதிர்த்து வருகின்றது. 

கடந்த ஆண்டு வாலிபால் போட்டியின் போதும் இதேபோன்று நடந்த தாக்குதல் சம்பவத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

0 comments:

Post a Comment