களத்தில் நான் சிறப்பாக விளையாடி என்ன புண்ணியம். எங்கள் அணி தோற்று விட்டதே,’’என, கனத்த இதயத்துடன் கூறினார் சென்னை அணியின் ஹர்மன்ஜோத் கப்ரா. இவரது ஆதங்கம் நியாயமானது தான். சொந்த மண்ணில் சென்னை வீழ்ந்ததை யாராலும் எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.
சென்னையில், இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் (ஐ.எஸ்.எல்.) முதல் போட்டி நேற்று நடந்தது. இதில், சென்னை அணி, கோல்கட்டாவிடம் 2–3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
சென்னை வசம் 53 சதவீதம் பந்து இருந்த போதும், ‘பினிஷிங்’ இல்லாததால் வெற்றி நழுவியது. இப்போட்டியின் சென்னை அணியின் அன்னிய வீரர்களை காட்டிலும் இந்திய நட்சத்திரங்களான ஹர்மன்ஜோத் கப்ரா, ரால்டே, ஜேஜே அடங்கிய மூவர் கூட்டணி தான் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தது.
‘இத்தாலி அணியில் விளையாடக்கூடிய திறமை கப்ராவுக்கு உள்ளது’, என, சென்னை அணியின் பயிற்சியாளர் மெடாரசி ஒரு முறை கூறினார். இதை நிரூபிக்கும் வகையில் கப்ராவின் ஆட்டம் இருந்தது.
மத்திய களத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினார். கோல்கட்டாவின் நட்சத்திர வீரரான போர்ஜா பெர்னாண்டசிற்கு கடும் சவால் கொடுத்தார். போட்டி முடிந்ததும் தனது ஆட்டம் குறித்து கப்ரா கூறுகையில்,‘‘அணி தோற்ற நிலையில், நான் சிறப்பாக விளையாடியதில் பலன் இல்லை,’’என்றார்.
மற்றொரு வீரரான ரால்டேவும் பம்பரமாக சுழன்று ஆடினார். பந்தை தன் கட்டுப்பாட்டில் வைப்பதில் வல்லவராக இருந்தார்.
மிசோரமை சேர்ந்த ஜேஜே அற்புதமாக கோல் அடித்து, சென்னை ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார். ‘அடுத்த பூட்டியா’ என வர்ணிக்கப்படும் இவர், பல முறை கோல் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தந்தார்.
இவர் கூறுகையில்,‘‘அரங்கில் திரண்டிருந்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி. அணி தோல்வி அடைந்ததால், இவர்களிடம் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை அணியின் ‘லெவனில்’ வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். கோல் அடித்த போதும், மகிழ்ச்சி கிடைக்கவில்லை,’’என்றார்.
வரும் போட்டிகளில் ஜேஜே, கப்ரா, ரால்டே அடங்கிய மூவர் அணி, இன்னும் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் சென்னை அணி, வெற்றிப்பாதைக்கு திரும்பலாம்.
0 comments:
Post a Comment