வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற 3வது ஒரு நாள் போட்டியில் ரெய்னா சதம் அடிக்க, இந்திய ‘ஏ’ அணி ‘டக்வொர்த்– லீவிஸ்’ முறைப்படி வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடரை 2–1 என கைப்பற்றியது.
இந்தியா ‘ஏ’, வங்கதேசம் ‘ஏ’ அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் மோதின. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என சமநிலை வகித்தது.
இரு அணிகள் மோதிய கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நேற்று பெங்களூருவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் உன்முக்த் சந்த், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
ரெய்னா சதம்:
இந்திய ‘ஏ’ அணிக்கு உன்முக்த் 41 ரன்கள் எடுத்தார். இதன் பின் இணைந்த சாம்சன் (90), ரெய்னா (104) ஜோடி அசத்தியது. கேதர் ஜாதவ், குர்கீரத் சிங் தலா 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில், இந்திய ஏ அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்தது.
இதன் பின் வங்கதேச ‘ஏ’ அணி களமிறங்கியது. மழை குறுக்கிட 46 ஓவரில் 297 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு மாற்றப்பட்டது. சவுமியா சர்கார் (1), அனாமுல் (1) சொதப்பினர். கேப்டன் மோமினுல் (37) நிலைக்கவில்லை.
நாசிர் ஹொசைன் 22 ரன்கள் எடுத்தார். வங்கதேச ‘ஏ’ அணி 32 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆட்டம் நிறுத்தப்பட்டது.
‘டக்வொர்த்–லீவிஸ்’ முறைப்படி வங்கதேச ‘ஏ’ அணி 32 ஓவரில் 217 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் இலக்கை எட்டவில்லை. இதையடுத்து இந்தியா ‘ஏ’ அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் தொடரை இந்திய அணி 2–1 என கைப்பற்றியது.
0 comments:
Post a Comment