தோனிக்கு பங்கு - கிளம்பியது புதிய சர்ச்சை



கேப்டன் தோனியின் விளம்பர ஒப்பந்தங்களை கவனித்து வரும், "ரிதி ஸ்போர்ட்ஸ்' நிறுவனத்தில் அவருக்கு 15 சதவீத பங்குகள் உள்ளதாம். 

இதே நிறுவனம் தான் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, பிரக்யான் ஓஜா போன்றோரை ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால், இவர்களுக்கு அணி தேர்வில் தோனி சாதகமாக செயல்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

இந்திய டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டி அணிகளின் கேப்டனாக இருப்பவர் தோனி. கடந்த 2007 ("டுவென்டி-20'), 2011 ல் உலக கோப்பை வென்று தந்தார். 

இவரது 15 ஆண்டு கால நண்பர் அருண் பாண்டே, "ரிதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட்' என்ற விளையாட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2010ல், இந்நிறுவனம் தோனியை ரூ. 210 கோடிக்கு மூன்றாண்டு ஒப்பந்தம் செய்தது. 

அதாவது ஆண்டுக்கு ரூ. 70 கோடி வழங்கும். இந்நிறுவனம் பரிந்துரை செய்யும் விளம்பரங்களில் தோனி தோன்ற வேண்டும். 


பங்கு எப்படி

கடந்த 2012-13ல் 15.1 சதவீத பங்குகளை ஒதுக்கியுள்ளது. தவிர, ரிதி ஸ்போர்ட்ஸ் தொடர்புடைய நான்கு நிறுவனத்தில் தோனிக்கு பங்குள்ளதாம். இதில் ஒன்று தான் "ரிதி-எம்.எஸ்.டி-என் மோட்டார் ஸ்போர்ட்ஸ்'. இது தான் "மகி ரைசிங்' என்ற பெயரில் பைக் பந்தய நிறுவனத்தை செயல்படுத்துகிறது.

வீரர்கள் தொடர்பு: இதே ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தான் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, பிரக்யான் ஓஜா மற்றும் ஆர்.பி.சிங் ஆகியோருடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக தோனி உள்ளதால், இந்த வீரர்களை அணியில், இடம் பெறச் செய்து, தோனி "சுயலாபம்' பார்ப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

தேர்வு செய்ய முடியுமா: ஆனாலும், அணித் தேர்வில் கேப்டன் என்ற முறையில் மட்டுமே, தோனி தனது கருத்துக்களை கூற முடியும். ஐந்து பேர் கொண்ட தேர்வாளர்கள் குழு தான் இறுதி முடிவெடுக்கும். இவர்கள் கேப்டன் கருத்தை மீறி செயல்பட முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. 

உதாரணமாக, பெரும்பாலான போட்டிகளில் சோபிக்காத போதும், ரவிந்திர ஜடேஜாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார் தோனி. சென்னை அணியிலும் ரவிந்திர ஜடேஜாவை (ரூ. 10.66 கோடி) சேர்த்தார். ஹர்பஜன் சிங்கை வெளியேற்றி அஷ்வினுடன், பிரக்யான் ஓஜாவை டெஸ்ட் அணியில் இடம் பெறச் செய்தார். இவர்கள் இருவரும் "ரிதி' நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சலுகை காட்டியிருக்கலாம்.

காரணம் என்ன: தவிர, "ரிதியுடன்' சென்னை அணிக்கும் ஒப்பந்தம் உள்ளது. இந்த அணியின் கேப்டனாகவும் தோனி உள்ளார். இதன் "கவுரவ' உறுப்பினர் குருநாத் தற்போது சிறையில் உள்ளார். இந்த ஒப்பந்தம் காரணமாகத் தான், சமீபத்திய சூதாட்டம் குறித்து தோனி வாய்திறக்க மறுப்பதாக கூறப்படுகிறது

0 comments:

Post a Comment