சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்ற இந்திய அணி, இன்னும் இரண்டு போட்டிகளில் சாதிக்க வேண்டியுள்ளது. இதனை இலக்காக கொண்டு வீரர்கள் செயல்பட வேண்டும்,''என, கேப்டன் தோனி வலியுறுத்தினார்.
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. இம்முறை லீக் சுற்றில் அசத்திய இந்திய அணி "ஹாட்ரிக்' வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. அடுத்து, வரும் 20ம் தேதி நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். பின் 23ம் தேதி நடக்கும் பைனலில் வென்றால், முதல் முறையாக கோப்பை கைப்பற்றலாம்.
நேற்று முன் தினம் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணியினர் அதே வேகத்துடன் செயல்பட வேண்டும் என தோனி கூறினார்.
தோனி கூறியது:
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் சிறப்பாக செயல்பட்டார். எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். புதிய பந்துகளிலும் "சுவிங்' செய்கிறார். குறைவான ஒரு நாள் போட்டிகளிலேயே விளையாடியுள்ள இவர், இன்னும் நல்ல வளர்ச்சி அடைவார்.
சிறப்பான அணி:
"மிடில்-ஆர்டர்' பலத்துடன் உள்ளது. நான், ரெய்னா, ஜடேஜாவின் ஆட்டம் நிலையானது. அதே நேரம் ரெய்னா வலைப்பயிற்சியில் இன்னும் அதிகமாக ஈடுபட வேண்டும். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்று துறைகளிலும் திறமையாக இருக்கிறோம்.
உலக கிரிக்கெட் அரங்கில் பீல்டிங்கில் நமது அணிதான் சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு வீரரும் தனக்குரிய பொறுப்புகளுடன் விளையாடுகின்றனர். நான் "கிளவுஸ்' அணிந்து செயல்படுகிறேன். ஆனால் இங்கு நிலவும் குளிரான சூழ்நிலையிலும் மற்ற வீரர்கள், வெறும் கையுடன் "கேட்ச்' பிடிக்கின்றனர்.
கோப்பை கைப்பற்ற இன்னும் இரண்டு சவால் பாக்கி உள்ளது. இதில், கடந்த போட்டிகளை போல அசத்தல் ஆட்டத்தை தொடர வேண்டும்.
இவ்வாறு தோனி கூறினார்.
புவனேஷ்வர் உற்சாகம்
புவனேஷ்வர் குமார் கூறுகையில்,""என் பயிற்சியாளர், கேப்டன் தோனி என்ன சொன்னார்களோ அதன்படி நடந்தேன். பயிற்சி போட்டியின்போது "சுவிங்' செய்ய அதிக சிரமப்பட்டேன். ஆனால் கடினமான உழைப்பின் மூலம், இதை சாத்தியமாக்கினேன்.
இதற்கு நல்ல பலன் கிடைத்தது. "சுவிங்' செய்வதை என் பலமாக கருதுகிறேன். அதே நேரம் சீனியர் வீரர்களுடன் பேசுவதனால், இன்னும் கற்றுக் கொண்டே இருக்கிறேன்,'' என்றார்.
0 comments:
Post a Comment