சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு முன்னேறியது இந்திய அணி. நேற்று நடந்த அரையிறுதியில், இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது.
இங்கிலாந்தில் கடைசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. நேற்று இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. மைதானம் ஈரப்பதமாக இருந்ததால், 40 நிமிடம் தாமதமாக போட்டி துவங்கியது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங்' செய்வது என, சரியான முடிவெடுத்தார்.
தில்ஷன் காயம்:
இலங்கை அணிக்கு தில்ஷன், குசால் பெரேரா ஜோடி துவக்கம் கொடுத்தது. வேகத்தில் அசத்திய புவனேஷ்வர் குமார், குசால் பெரேராவை (4) விரைவில் வெளியேற்றினார். உமேஷ் யாதவ் ஓவரில் இரு பவுண்டரி அடித்த தில்ஷன் (12), காயம் காரணமாக "ரிட்டையர்டு ஹர்ட்' முறையில் பெவிலியன் திரும்பினார்.
சங்ககரா, திரிமான்னே இணைந்து மந்தமாக ஆடினர். 31 பந்தில் 7 ரன்கள் எடுத்த திரிமான்னே, இஷாந்த் வேகத்தில் அவுட்டானார். தொடர்ந்து அசத்திய இஷாந்த் சர்மா, "அனுபவ' சங்ககராவையும் (17) நீடிக்க விடவில்லை.
மாத்யூஸ் அரைசதம்:
இலங்கை அணியின் "நிதான' ஆட்டத்தினால், 20.5வது ஓவரில் தான், ஸ்கோர் 50 ரன்களை தாண்டியது. கேப்டன் மாத்யூஸ், அணிக்காக முதல் சிக்சர் அடித்தார். அவ்வப்போது பவுண்டரி அடித்த ஜெயவர்தனா (38 ரன், 63 பந்து), ஜடேஜா சுழலில் சிக்கி போல்டானார்.
பின் மாத்யூசுடன், ஜீவன் மெண்டிஸ் இணைந்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாத்யூஸ், ஒருநாள் அரங்கில் 14வது அரைசதம் கடந்தார். இவர் 51 (89 பந்து) ரன்னுக்கு அஷ்வினிடம் வீழ்ந்தார். திசரா பெரேரா வந்த வேகத்தில் "டக்' அவுட்டானார்.
குலசேகராவை (1) போல்டாக்கிய அஷ்வின், அடுத்து மெண்டிசையும் (25) திருப்பி அனுப்பினார். இலங்கை அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டும் எடுத்தது. மீண்டும் வந்த தில்ஷன் (18), மலிங்கா (7) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா, அஷ்வின் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
எளிய இலக்கு:
போகிற போக்கில் எட்டிவிடும் இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி மீண்டும் அசத்தல் துவக்கம் கொடுத்தது. மலிங்கா பந்தில் பவுண்டரி அடித்த தவான், ஒரு சிக்சரும் விளாசினார். 18 ரன்னில் இரண்டு முறை தப்பிப்பிழைத்த இவர், திசரா பெரேரா ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்தார்.
தவான் அரைசதம்:
குலசேகரா பந்துகளில் பவுண்டரிகள் அடித்த ரோகித் சர்மா (33) நிலைக்கவில்லை. தவானுடன் சேர்ந்த கோஹ்லி, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் அசத்தலை தொடர்ந்த தவான், அரைசதம் கடந்தார். இவர் 68 ரன்னுக்கு அவுட்டனார்.
கோஹ்லி அபாரம்:
மலிங்கா ஓவரில் இரு பவுண்டரி அடித்த கோஹ்லி, மெண்டிஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பி, ஒருநாள் அரங்கில் 23வது அரைசதம் கடந்தார். கடைசியில் ரெய்னா ஒரு "சூப்பர்' பவுண்டரி அடிக்க, இந்திய அணி 35 ஓவரில் 2 விக்கெட்டுக்கு, 182 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோஹ்லி (58), ரெய்னா (7) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை இந்தியாவின் இஷாந்த் சர்மா வென்றார்.
தோனி "பவுலிங்'
கடந்த 2009ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, முதன் முதலில் பவுலிங் செய்தார் இந்திய அணி கேப்டன் தோனி. இதில் 2 ஓவர்கள் வீசிய இவர் ஒரு விக்கெட் (டவ்லின்) கைப்பற்றினார். நேற்று மீண்டும் பவுலிங் செய்த இவர், 4 ஓவரில் 17 ரன்கள் கொடுத்து விக்கெட் வீழ்த்தவில்லை.
சபாஷ் புவனேஷ்வர்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எதிரணியின் இடதுகை துவக்க வீரர்களை "குறி' வைத்து தாக்குகிறார் புவனேஷ்வர் குமார். லீக் சுற்றில் தென் ஆப்ரிக்காவின் இங்ராம் (6 ரன்), வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (21), பாகிஸ்தானின் ஜாம்ஷெத்தை (2) அவுட்டாக்கினார். நேற்றைய அரையிறுதியில் இலங்கை அணியின் இடதுகை துவக்க வீரர் பெரேராவையும் (4), விரைவில் "அவுட்' செய்தார்.
* இந்த நான்கு விக்கெட்டில், ரெய்னா மூன்று முறை "கேட்ச்' செய்துள்ளார்.
0 comments:
Post a Comment