காயம் காரணமாக ஓய்வில் இருந்த சச்சின், நேற்று மும்பையில் பேட்டிங் பயிற்சியை துவக்கினார்.
இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். ஒரு நாள் தொடர் துவங்க இருந்த நேரத்தில், ஏற்கனவே ஆப்பரேஷன் செய்திருந்த இவரது கால் பெருவிரலில், லேசாக வீக்கம் ஏற்பட்டது.
தொடர்ந்து வீக்கமும், வலியும் அதிகரித்ததால், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்காமல் நாடு திரும்பினார்.
இது குறித்து லண்டனில் உள்ள, "ஸ்பெஷலிஸ்ட்' டாக்டர் ஜேம்ஸ் கால்டரை சந்தித்தார். அவரது ஆலோசனையில் பேரில், சச்சினுக்கு என "ஸ்பெஷலாக' வடிவமைக்கப்பட்ட "ஷூ' அணிந்து வந்தார்.
சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், மும்பை அணிக்கு ஹர்பஜன் சிங் தலைமை ஏற்று, கோப்பை வென்று தந்தார். போட்டிகளில் பங்கேற்கவில்லை என்ற போதிலும், சச்சின் தனது அணியினருடன் சென்று, வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
காயம் காரணமாக, இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடக்கும் ஒருநாள் தொடரில், முதல் இரு போட்டிகளுக்கான அணியிலும் சச்சின் தேர்வு செய்யப்படவில்லை.
இதனிடையே, நேற்று முன்தினம் மும்பையில் உள்ள "பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ்' மைதானத்தில் சச்சின், பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
இதையடுத்து சச்சின், வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு அணிக்கு திரும்பி விடுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, சேவக்கும் வரவுள்ள நிலையில், சச்சினும் பயிற்சிக்கு திரும்பியது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.
0 comments:
Post a Comment