ஈடன் கார்டன் மைதானத்துக்குள் நுழைந்த முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியை பார்த்து, ஐ.சி.சி., அதிகாரி ஒருவர் "யார் நீங்கள்?' எனக் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.
இப்போட்டி துவங்குவதற்கு முன், "பிட்ச் ரிப்போர்ட்' கொடுப்பதற்காக மைதானத்திற்குள் நுழைந்த உள்ளூர் "ஹீரோ'வும், வர்ணனையாளருமான கங்குலியை, ஐ.சி.சி.,யின் ஊழல் தடுப்பு அதிகாரி தர்மேந்தர் சிங் யாதவ், "யார் நீங்கள்?' எனக் கேட்டார்.
அப்போது அவர், "நான் தான் கங்குலி. "பிட்ச் ரிப்போர்ட்' கொடுப்பதற்காக மைதானத்திற்குள் செல்கிறேன்,'' எனக் கூறினார். இதற்கு ஒன்றும் மடங்காத தர்மேந்தர் சிங் யாதவ், கங்குலியை மைதானத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கவில்லை.
அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறினார். அடையாள அட்டையை, வர்ணனையாளர் அறையில் வைத்துவிட்டு வந்த கங்குலி, மீண்டும் சென்று எடுத்து வந்தார்.
அதன்பின் கங்குலியை மைதானத்திற்குள் செல்ல அனுமதி அளித்தார். இச்சம்பவம் குறித்து கங்குலி கருத்து ஒன்றும் தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து மேற்கு வங்க கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் பிஸ்வாரப் தேய் கூறுகையில், ""இந்த சம்பவம் குறித்து விசாரித்து முடிவு எடுக்கப்படும். இது பற்றி கங்குலியுடன் பேச உள்ளேன்,'' என்றார்.
0 comments:
Post a Comment