பழிவாங்கும் படலமா?: கேப்டன் தோனி மறுப்பு

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை பழிவாங்கும் படலமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. விளையாட்டில் இந்த வார்த்தை மிகவும் கடினமானது,'' என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டித் தொடரில் ஒரு வெற்றிகூட பெறாமல், வெறுங்கையுடன் திரும்பியது. இதற்கு, தற்போதைய இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பதிலடி கொடுத்தது. தொடரை 3-0 என வென்று பழிதீர்த்தது.

இதுகுறித்து கேப்டன் தோனி கூறியது:

விளையாட்டு என்று வரும் போது, பொதுவாக பழி தீர்ப்பது என்பது மிகவும் கடினமான வார்த்தை. விளையாட்டு உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பேசிக்கொண்டே, பழி தீர்ப்பது பற்றியும் பேசுகிறோம். இந்த வார்த்தையை விளையாட்டில் பயன்படுத்துவது குறித்து நான் நினைக்கவே இல்லை.


வெற்றிக்கு காரணம்:

இத்தொடரில் சீனியர் வீரர்கள் பலர் காயமடைந்த நிலையில், இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல, இங்கிலாந்து தொடரில் "டாஸ்' கூட வெல்ல முடியவில்லை. இருப்பினும் அதிக ரன்கள் எடுத்தோம்.

ஆனால், மழை, பனிப்பொழிவு போன்ற காரணங்களால் சரியாக பவுலிங் செய்ய முடியவில்லை. இப்போது சொந்த மண் சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக உள்ளது. இதைப் பயன்படுத்தி பவுலர்கள் சிறப்பாக செயல்படுவது தான் வெற்றிக்கு காரணம்.


இளமைக்கு முன்னுரிமை:

பேட்டிங்கின் போது வழக்கம் போல, இளம் வீரர்களை முன்னணி வரிசையில் களமிறங்க வேண்டும் என விரும்புவேன். அவர்கள் 20 ஓவர்களுக்கும் அதிகமாக பேட்டிங் செய்யும் போது, தங்களது திறனை பட்டை தீட்டிக்கொள்ள உதவும். ஏற்கனவே, முக்கிய வீரர்கள் காயம் அடைந்த நிலையில், இப்படிச் செய்தால் திறமையான வீரர்களை கண்டறிய முடியும்.


தாமதமான வெற்றி:

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் நாங்கள் எளிதாக வென்றிருக்க வேண்டும். இடையில் ஒரு சில விக்கெட்டுகளை இழந்ததால், சற்று நெருக்கடி ஏற்பட்டது. கூடுதலாக ஒரு விக்கெட்டை இழந்திருந்தால், இலக்கை எட்டுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டு இருக்கும், அவ்வளவு தான்.


எங்களுக்கு சாதகம்:

தவிர, நானும், ஜடேஜாவும் களத்தில் இருக்கும் வரை எப்படியும் வெல்வோம் என்று நம்பினோம். இதற்கேற்ப பனிப்பொழிவு சாதகமாக இருந்தது. இதனால் இங்கிலாந்து பவுலர்கள் "ரிவர்ஸ் சுவிங்', "யார்க்கர்' முறையில் பவுலிங் செய்ய முடியவில்லை.

தொடரை வென்று விட்டதால், அடுத்து வரும் போட்டிகளில், பிற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இதுகுறித்து அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். மொத்தத்தில் சூழ்நிலைக்கேற்ப சிறந்த வீரர்களுடன் களமிறங்குவோம்.

இவ்வாறு தோனி கூறினார்.

0 comments:

Post a Comment