எதிர்வரும் டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணிக்கு சச்சின் தான் அச்சுறுத்தலாக இருப்பார்,'' என, மைக்கேல் வான், நாசர் உசேன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் எச்சரித்துள்ளனர்.
நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில், வரும் ஜூலை 21ம் தேதி துவங்குகிறது. இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் (ஐ.சி.சி.,) நடக்கும் 2000 வது டெஸ்ட் என்பது மற்றொரு சிறப்பு.
இத்தொடர் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்கள் கூறியது:
மைக்கேல் வான்:
சிறந்த வீரர் என்பவர், அவ்வப்போது தனது"ஸ்டைலில்' சில மாற்றங்களை செய்து கொள்வார். ஏனெனில் அப்போது தான், அந்த விளையாட்டு போட்டியில் தொடர்ந்து அசத்த முடியும். தற்போது சச்சின் இப்படித் தான் உள்ளார். கடந்த 2007க்குப் பின் இவர், வித்தியாசமான வீரராக மாறியுள்ளார்.
அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்துகிறார். துவக்க காலத்தில் எப்படி ரன்கள் சேர்த்தாரோ, அதுபோல விளையாடி, அணிக்காக ரன்கள் சேர்க்கிறார்.
இங்கிலாந்து அணியில் இப்போதுள்ள டிரம்லெட், 2007க்குப் பின் சச்சினுக்கு எதிராக சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் சச்சினை பொறுத்தவரையில் எவ்வித பலவீனத்தையும் வைத்துக் கொள்வதில்லை.
இங்கிலாந்து வீரர்கள் இவரை "அவுட்' செய்ய தொடர்ந்து போராட வேண்டும். தவிர, "ஷார்ட் பிட்ச்' பந்துகளை வீசிப் பார்க்க வேண்டும். இருப்பினும் இவையெல்லாம், சச்சினுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளில், எந்த பலனையும் தரவில்லை என, அனுபவசாலிகள் கூறுகின்றனர்.
நாசர் உசேன்:
கடந்த சில ஆண்டுகளாக சச்சின், தனது ஆட்டமுறையை தொழில்நுட்பம் மற்றும் மனதளவில் மாற்றிக் கொண்டுள்ளார். தற்போது அவரது "ஷாட்டுகள்' ஆக்ரோஷமாகவும், கட்டுக்கடங்காமலும் உள்ளது. தனது விக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர், சில சாதனைகள் மற்றும் சதங்களுக்குப் பின், "ரன் மெஷினாக' மாறிவிட்டார்.
மைக் ஆர்தர்டன்:
கடந்த 1996ல் டிரென்ட் பிரிட்ஜில் நடந்த டெஸ்ட் போட்டியில், சச்சின் கொடுத்த "கேட்ச்' வாய்ப்பை நழுவ விட்டேன். இதைப்பயன்படுத்தி சதம் அடித்து விட்டார். களத்தில் அமைதியாக, நிலையாக இருக்கும், இவரை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது. புராதான நம்பிக்கைகளில் அதிக நம்பிக்கையுள்ள சச்சின், எந்த தவறுக்கும் இடம் தராமல் விளையாடுவார்.
கிரகாம் கூச்:
சச்சினை 1990ல் இருந்து பார்க்கிறேன். 17 வயது சிறுவனாக இருந்த போதே, இவரிடம் பெரிய திறமை இருந்தது. பந்துகளை சரியாக கணிக்கும் அவர், சரியான நேரத்தில், சரியான அளவில், விளாசுவார். இதுபோன்ற பல்வேறு வகையான திறமைகள் தான், சச்சினை உலகத் தரம் வாய்ந்த வீரராக உயர்த்தியுள்ளது.
0 comments:
Post a Comment